வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டு வாடகை அக்டோபரில் சற்று உயர்ந்திருந்தது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோரில் 0.5% அதிகரிப்பு பதிவானது.
முதிர்ச்சியடைந்த வட்டாரங்களில் 0.9% வாடகை அதிகரிப்பும் முதிர்ச்சியடையாத வட்டாரங்களில் 0.2% சரிவும் அக்டோபரில் பதிவாகின.
இதற்கிடைய, 99.co சொத்து இணையவாசலின் தரவு, பகுப்பாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி லுக்மான் ஹக்கீம், “குறைந்தபட்சக் குடியிருப்புக் காலகட்டத்தை நிறைவுசெய்த வீடுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வாடகையும் அதிகரித்துள்ளது. இந்தப் போக்கு 2024ஆம் ஆண்டிறுதிவரை வாடகை அதிகரிப்பைத் தக்கவைத்திடும். 2 முதல் 3 விழுக்காடு அதிகரிப்பும் ஏற்படக்கூடும்,” என்றார்.
மூன்றறை வீவக வீடுகளின் வாடகையில் 1.2% அதிகரிப்பும் ஐந்தறை வீட்டு வாடகையில் 0.7% அதிகரிப்பும் எக்சிகியூட்டிவ் வீட்டு வாடகையில் 0.8% அதிகரிப்பும் பதிவாகின. இதற்கிடையே, நான்கறை வீட்டு வாடகை 0.3% குறைந்தது.
ஆண்டு அடிப்படையில், எக்சிகியூட்டிவ் வீட்டு விலையில் ஆகக் கூடுதலாக 6.4% அதிகரிப்பு பதிவானது. அடுத்த நிலையில் மூன்றறை வீட்டு விலை 5.6% அதிகரித்தது.
கூட்டுரிமை வாடகைச் சந்தையில், தொடர்ந்து மூன்றாவது மாதமாகச் சரிவு ஏற்பட்டது. செப்டம்பரில் வாடகைக்கு விடப்பட்ட 6,172 வீடுகளுடன் ஒப்பிடுகையில் அக்டோபரில் 7.5% குறைந்து 5,712 வீடுகள் மட்டுமே வாடகைக்கு விடப்பட்டன.
இருப்பினும், ஆண்டு அடிப்படையில் கூட்டுரிமை வாடகை எண்ணிக்கை 5.3% அதிகரித்தது.
இதற்கிடையே, வாடகைதாரரின் விருப்பங்களின் பன்முகத்தன்மையை வீவக, கூட்டுரிமை வாடகைச் சந்தைகளில் வேறுபட்டு காணப்படும் போக்குகள் வலியுறுத்திக் காட்டுவதாக திரு லுக்மான் குறிப்பிட்டார்.

