கூட்டுரிமை மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதம் இறங்கியது.
கூடுதலான பொது வீடமைப்புத் தெரிவுகளோடு, தனியார் சந்தையில் புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அந்த இறக்கம் வந்துள்ளதாக நிபுணர்கள் கூறினர்.
‘எஸ்ஆர்எக்ஸ்’, 99.co ஆகிய சொத்து இணையவாசல்கள் வெளியிட்ட ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, ஏறக்குறைய 1,026 வீடுகள் மறுவிற்பனைக்கு விடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட்டில் பரிவர்த்தனை செய்யப்பட்ட 1,084 வீடுகளைக் காட்டிலும் அது 5.3 விழுக்காடு குறைவு.
“வாடிக்கையாளர்கள் மேலும் சாதகமான அடைமான விகிதங்களை எதிர்பார்ப்பதால், வட்டி விகிதங்களில் மேலும் தெளிவு ஏற்படும்வரை அவர்கள் வீடு வாங்கும் முடிவைத் தள்ளிவைக்கின்றனர்,” என்று சிங்கப்பூர் சொத்து முகவர்கள் நிறுவனத்தின் (எஸ்ஆர்ஐ) ஆய்வு, தரவுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவர் மோகன் சந்திரசேகரன் கூறினார்.
ஒட்டுமொத்த விலைகள் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், 0.8 விழுக்காடும் சென்ற ஆண்டு செப்டம்பரைக் காட்டிலும் 4.4 விழுக்காடும் கூடின.
வீட்டு எண்ணிக்கை குறைந்தாலும், இவ்வாண்டு ஏப்ரலிலிருந்து விலைகள் ஆக வேகத்தில் உயர்ந்தன. இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், மறுவிற்பனையான கூட்டுரிமை வீட்டு விலைகள் 3.2 விழுக்காடு அதிகரித்தன.


