ஒப்படைத்த பணப்பையை சுயதேவைக்குப் பயன்படுத்திய கூட்டுரிமை குடியிருப்பு பாதுகாவலருக்குச் சிறை

ஒப்படைத்த பணப்பையை சுயதேவைக்குப் பயன்படுத்திய கூட்டுரிமை குடியிருப்பு பாதுகாவலருக்குச் சிறை

2 mins read
16948f5b-b4d2-48f0-8e99-49469db4bef6
படம்: - தமிழ்முரசு
Google News Preferred Icon

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணப்பையை உரிய குடியிருப்பாளரிடம் ஒப்படைக்காமல் தன் தேவைக்குப் பயன்படுத்திய கூட்டுரிமை வீட்டு பாதுகாவலருக்கு மூன்று வாரச்சிறை தண்டனை புதன்கிழமை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரரான அந்த 56 வயது பாதுகாவலரின் பெயர் முருகையா. அவர் அல்கோவ் கூட்டுரிமை குடியிருப்பில் பாதுகாவலராக பணிபுரிந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி, அல்கோவ் கூட்டுரிமை குடியிருப்பில் வசிக்கும் 46 வயது ஆடவர் ஒருவர் தன் பணப்பையையும் சாவியையும் குடியிருப்பின் நுழைவாயிலில் தவறவிட்டார்.

அவ்வழியே சென்ற ஆடவர் ஒருவர் அதைக் கண்டு அதனை அப்போது குடியிருப்பின் பாதுகாப்பு அறையில் இருந்த முருகையாவிடம் ஒப்படைத்தார்.

அந்தப் பணப்பையில் குறைந்தது S$500 இருந்தது என்றும் லூயிஸ் வுய்ட்டன் தயாரிப்பான அந்தக் கறுப்பு நிறப் பணப்பையின் மதிப்பு S$1,800 இருக்கும் என்றும் கூறப்பட்டது.

முருகையா அந்தப் பணப்பையை உரியவர் யாரென்று தேடி விசாரிக்காமல் அதனை தன்னோடு தன் வீட்டுக்கு கொண்டு சென்றார்.

அடுத்த நாள், பாதிக்கப்பட்டவர் முருகையா மற்றும் முருகையாவின் மேற்பார்வையாளரிடம் தனது தொலைந்த பணப்பையைப் பற்றி கேட்டார்.

அந்தப் பணப்பை தன்னிடம் தான் உள்ளது என முருகையா ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்டவர் தொலைத்த சாவியை ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி முருகையா அவரிடம் ஒப்படைத்தார். பணப்பையை அதற்கு மறுநாள் தான் ஒப்படைத்தார். அதில் வெறும் $10 தான் இருந்தது.

அந்தப் பணத்தைத் தன் சுயதேவைக்குப் பயன்படுத்தியது குறித்து அப்போது எதுவும் பாதிக்கப்பட்டவரிடம் முருகையா தெரிவிக்கவில்லை.

பாதிக்கப்பட்டவர் தன் பணப்பையிலிருந்து பணம் திருடுபோனது குறித்துக் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். முருகையாவைக் காவல்துறையினர் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்தனர்.

முருகையா நீதிமன்றத்தில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கைப்பையிலிருந்த பணத்தைத் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொண்டதை ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்