தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டட 300 கிலோ உணவுப்பொருள்கள் பறிமுதல்

2 mins read
f9ccfb61-03b6-49b6-9cfe-9808ff195ccd
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி. - படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு

தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 கிலோ உணவுப்பொருள்களை எஸ்எஃப்ஏ (SFA) எனப்படும் சிங்கப்பூர் உணவு அமைப்பு பறிமுதல் செய்துள்ளது.

செப்டம்பர் 24ஆம் தேதி அந்த அமைப்பு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அந்தப் பொருள்கள் சிக்கின.

சிட்டி கேட், பீச் ரோட்டில் உள்ள கோல்டன் மைல் டவர் ஆகிய வளாகங்களில் உள்ள உணவுக் கடைகள் ஐந்தில் அந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.

அவற்றில் நான்கில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியும் பூச்சிகளாலான தயாரிப்புகளும் விற்கப்பட்டதை எஸ்எஃப்ஏ அதிகாரிகள் கண்டனர்.

கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டு இறைச்சி ஆகியவற்றோடு சிலவகை வண்டுகளும் நத்தைகளும் உணவுப்பொருளாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததாக அந்த அமைப்பு புதன்கிழமை (அக்டோபர் 9) தெரிவித்தது.

உரிமம் இன்றி செயல்பட்ட இரண்டு உணவுக் கடைகளும் சோதனையில் சிக்கின.

சோதனையில் சிக்கிய எல்லா உணவுக் கடை உரிமையாளர்களிடமும் அமைப்பின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்பின் தெரியாத இடங்களில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருள்களால் ஆபத்து அதிகம் என்பதால் சிங்கப்பூர் உணவு அமைப்பின் விதிகளுக்கும் இணங்கி உணவுப்பொருள்களை இறக்குமதி செய்வது கட்டாயம்.

மேலும், உரிமம் பெற்ற இறக்குமதியாளர்கள் மூலமே பொருள்களை இங்கு கொண்டு வரவேண்டும். ஒவ்வொரு பொருளின் விவரங்களை அறிவிப்பதோடு அவை ஒவ்வொன்றும் இறக்குமதி அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு நினைவூட்டி உள்ளது.

குறிப்பாக, இறைச்சி, இறைச்சி தொடர்பான பொருள்களை, சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பு விதிகளுக்கு இணங்கும் நாடுகளில் உள்ள உரிமம் பெற்ற வியாபாரிகளிடம் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும்.

விற்பனை செய்வதற்காக, உரிமம் இன்றி இறைச்சி மற்றும் கடலுணவுப் பொருள்களை இறக்குமதி செய்வோருக்கு $50,000 வரை அபராதமும் ஈராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்