தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்; இருவர் கைது

1 mins read
6c1101e9-7907-4409-a9e3-fb2d849cd547
வேனில் கண்டறியப்பட்ட அட்டைப்பெட்டிகளில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள். - படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை
multi-img1 of 2

சிங்கப்பூர் சுங்கத்துறை நடத்திய திடீர் சோதனையில், $450,000க்குமேல் சிகரெட் தீர்வை, வரி ஏய்ப்பு செய்ததற்காகவும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவும் ஓர் ஆடவரும் ஒரு மாதும் ஜனவரி 23ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

ஒட்டுமொத்தமாக, வரி செலுத்தப்படாத 4,228 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளும் இரு வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை திங்கட்கிழமை (பிப்ரவரி 3) தெரிவித்தது.

திடீர் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், பெட்டிர் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த வேனில் வரி செலுத்தப்படாத 1,252 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளைக் கண்டறிந்தனர்.

அருகில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த வேறொரு வேனின் சாவியையும் அந்த வேனில் அதிகாரிகள் கண்டனர். அந்த மற்றொரு வேனில் வரி செலுத்தப்படாத மேலும் 2,976 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அவ்விரு வேன்களில் ஒன்றில், போதைப்பொருள் உட்கொள்ள பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கண்டெடுக்கப்பட்டன. விசாரணைக்காக அவை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

29 வயதுடைய இரு சிங்கப்பூரர்களான ஓர் ஆடவரும் ஒரு மாதும் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்தது.

மொத்தம் $457,968 பெறுமானமுள்ள தீர்வை மற்றும் பொருள், சேவை வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விநியோகம் செய்வதில் அந்த ஆடவர் ஈடுபட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவருக்கு எதிராக நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த மாதிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்