‘ஐரோப்பா, மத்திய கிழக்கில் நிலவும் பூசல்கள், ஆசியாவிலும் நிகழக்கூடாது’

‘ஐரோப்பா, மத்திய கிழக்கில் நிலவும் பூசல்கள், ஆசியாவிலும் நிகழக்கூடாது’

2 mins read
21வது ஷங்ரிலா கலந்துரையாடலில் தற்காப்பு அமைச்சர்கள் இணக்கம்
5b340dbc-fa7c-43dc-9bf7-0f9527c0c3b4
சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், 21வது ஷங்ரிலா கலந்துரையாடலில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள், பிரதிநிதிகளுக்கான வட்டமேசைக் கருத்தரங்கை ஏற்றுநடத்தினார். - படம்: தற்காப்பு அமைச்சு

ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் நிலவும் பூசல்களும் மனிதாபிமான நெருக்கடிகளும் இப்பகுதியில் இடம்பெறக்கூடாது என்பதில் ஆசிய நாடுகள் உறுதியாக உள்ளன.

சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கூறுகையில், தற்போது நடைபெற்று வரும் ஷங்ரிலா கலந்துரையாடலில் இதுவே கருப்பொருளாக இருந்தது.

“ஆசியாவில் மோதல் ஏற்படக்கூடாது என்ற ஒரு வலுவான தீர்மானம் அல்லது முன் அனுமானம் உள்ளது,” என்றார் அவர்.

சிங்கப்பூரில் நடைபெறும் 21வது ஷங்ரிலா கலந்துரையாடலுக்காக பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்துள்ள 24 தற்காப்பு அமைச்சர்கள், பிரதிநிதிகளுக்கான வட்டமேசைக் கருத்தரங்கை சனிக்கிழமை (ஜூன் 1) நடத்திய பிறகு டாக்டர் இங் செய்தியாளர்களிடம் பேசினார்.

அமெரிக்கா-சீனா உறவுகள், உக்ரேனிலும் காஸாவிலும் தொடரும் மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடினர்.

உலகம் தற்போது சிக்கலான பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ளும் சூழலில், வட்டார அளவிலும் அனைத்துலக நிலையிலும் அமைதியையும் நிலைத்தன்மையையும் கட்டிக்காப்பதன் அவசியத்தை அமைச்சர்கள் மறுஉறுதி செய்தனர்.

விதிமுறைகளின் அடிப்படையிலான அனைத்துலக ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்தல், கடல், ஆகாய வழித் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான ‘சியூஇஎஸ்’, ‘ஜிஏஎம்இ’ போன்ற நடத்தை விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நம்பிக்கையை வளர்த்தல், சர்ச்சைகளைத் தடுத்தல், தீர்வுகாணுதலுக்கான நடைமுறைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை அவர்கள் சுட்டினர்.

பல்வேறு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள், தொடர்ந்து இத்தகைய கலந்துரையாடலை நடத்துதல், பலதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய அம்சங்கள் தொடர்பில் இணக்கம் கண்டுள்ளனர்.

ஷங்ரிலா கலந்துரையாடலின் ஓர் அங்கமாக இத்தகைய வட்டமேசைக் கருத்தரங்கு நடைபெறுவது வழக்கம்.

இம்முறை இந்த வட்டமேசைக் கருத்தரங்கில் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டினும் சீனத் தற்காப்பு அமைச்சர் அட்மிரல் டோங் ஜுன்னும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ஷங்ரிலா கலந்துரையாடலைத் தொடர்ந்து ஏற்று நடத்துவதன் மூலம் சிங்கப்பூர் தொடர்ந்து பங்காற்றும் என்றும் வெவ்வேறு கருத்துகளையும் கண்ணோட்டங்களையும் கொண்டுள்ள பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட ஓர் இடத்தை வழங்கும் என்றும் டாக்டர் இங் கூறினார்.

எனினும், அமெரிக்கா-சீனா இடையே நிலவும் எந்தப் பிரச்சினைக்கும் இரு தரப்பினராலேயே தீர்வுகாண முடியும் என்று கூறிய அவர், இரு நாட்டு அமைச்சர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருப்பது, மற்ற கருத்துகளைக் கேட்க வேண்டும் என்ற விருப்பத்தை உணர்த்துவதாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்