இவ்வாண்டின் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, சிங்கப்பூரின் புகழ்பெற்ற ‘ஜம்போ’ குழுமத்தின்கீழ் இயங்கும் ‘முத்தியாரா’ கடல் உணவகம், சிறப்புக் கடல் உணவுவகைகளை இரவு நேரங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
சலுகை விலையிலான அந்தச் சிறப்பு உணவு, திங்கள் முதல் வியாழன்வரை கிடைக்கும்.
அதனை இம்மாதம் (மார்ச்) 4ஆம் தேதிமுதல் ஏப்ரல் 19ஆம் தேதிவரை, விஸ்மா கேலாங் செராய் வளாகத்தில் அமைந்துள்ள உணவகத்தில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சுவைத்து மகிழலாம்.
இரண்டு பேர்முதல் பத்துப் பேர்வரை உண்பதற்கு ஏதுவாகப் பலதரப்பட்ட தெரிவுகள் உள்ளன.
இனிப்பும் காரமும் கலந்த சுவையான நண்டுக் குழம்புடன் வழங்கப்படும் பொரித்த ‘மாந்தவ்’ ரொட்டிகள், பாலித் தீவு பாணியில் மசாலா தடவி வாட்டப்பட்ட இறால்கள், புத்துணர்வு அளிக்கும் காரமான கடல் உணவு சூப் எனப் பலவற்றை இங்கு ரசித்து உண்ணலாம்.
பாரம்பரிய கம்போங் சுவையும் நவீனச் சமையற்கலையும் இணைந்த அற்புதமான கடல் உணவு அங்குக் கிடைக்கிறது.
உணவகத்திற்கு வர இயலாதவர்கள், நேரடியாக வீட்டுக்கு விநியோகிக்கும் சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

