விடுமுறையோடு வாரயிறுதியும் வந்ததால் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நெரிசல்

விடுமுறையோடு வாரயிறுதியும் வந்ததால் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நெரிசல்

1 mins read
09abbee1-6d40-4abc-ad21-6ca18a172b0b
கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி புனித வெள்ளிக்கிழமை நாளில் காலை 6.45 மணிக்கு ஜோகூர் நோக்கிச் செல்லும் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வாகன நெரிசலைக் காட்டும் படம். - படம்: சாவ்பாவ்

புனித வெள்ளிக்கிழமை விடுமுறை, வார இறுதி இவற்றோடு, சீனர்கள் முன்னோர் கல்லறைக்கு மரியாதை செலுத்தும் ‘குவிங் மிங்’ என்ற வழிபடும் நாளும் ஒன்று சேர்ந்ததால், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பலர் அங்கு காத்திருக்க நேரிட்டது. பல பயணிகள் பேருந்துகளுக்குக் காத்திருக்கும் இடத்தில் ஏற்பட்ட நெரிசலை இணையத்தில் காணொளிகளாகப் பதிவிட்டனர்.

சிங்கப்பூரில் பணிபுரியும் பல மலேசியர்கள் அந்தப் பாரம்பரிய சீன வழிபாட்டு தினத்தை அனுசரிக்கும் விதமாக அவர்களது இல்லங்களுக்குத் திரும்பினர். அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) பிறக்கிறது.

அன்றைய தினம் சீனர்கள் அவர்களது முன்னோர்களின் கல்லறைகளைச் சுத்தம் செய்து, வழிபாடுகள் நடத்தி மறைந்தோர்க்கு மரியாதை செய்வர்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை சிங்கப்பூரில் உள்ள சோதனைச் சாவடியைத் தாண்ட நேரம் எடுத்ததாகவும், கடற்பாலத்தைக் கடந்து ஜோகூர் செல்லும் பேருந்துகளுக்கு காத்திருப்பதாகவும் பல மலேசியர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

குவீன் ஸ்திரீட்டில் பேருந்து ஏறி, கடற்பாலத்தைக் கடக்க ஏறத்தாழ நான்கு மணி நேரம் ஆனதாக சில மலேசியர்கள் தெரிவித்தனர். ஒருசிலர் குடும்பத்துடன் பேருந்துகளில் மணிக்கணக்கில் காத்திருந்ததை வாட்ஸ்ஆப் செயலியில் பதிவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்