தென்கிழக்காசிய நூலகங்கள் மாநாடு 2028ல் சிங்கப்பூரில் நடைபெறும்

1 mins read
b9f124fb-d8c9-4932-ab83-5a9b5de5b964
19வது கான்சால் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில், சிங்கப்பூரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அடுத்த மாநாட்டைச் சிங்கப்பூர் நூலகச் சங்கமும் தேசிய நூலக, ஆவணக் கழகமும் ஏற்று நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: தேசிய நூலக வாரியம்

‘கான்சால்’ எனப்படும் தென்கிழக்காசிய நூலகங்கள் மாநாட்டின் (Congress of Southeast Asian Libraries) 20வது கூட்டம், அம்மாநாடு தொடங்கிய இடமான சிங்கப்பூரிலேயே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1970ல் சிங்கப்பூரில் நிறுவப்பட்ட அம்மாநாடு, தென்கிழக்காசிய நூலகங்களுக்கும் நூலகம் சார்ந்த அமைப்புகளுக்கும் இடையிலான இணைமுயற்சிகளை ஏற்படுத்தும் தளமாக விளங்குகிறது.

‘கான்சால்’ சிங்கப்பூரில் நடக்கவிருப்பது இது நான்காம் முறை. இதற்குமுன் 1970, 1983, 2000 ஆகிய ஆண்டுகளில் சிங்கப்பூர் கான்சால் மாநாட்டை நடத்தியது.

தேசிய நூலக, ஆவணக் கழகமும் சிங்கப்பூர் நூலகச் சங்கமும் இணைந்து அதற்கு ஏற்பாடு செய்யும்.

ஜூன் 16 முதல் 19ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெற்ற 19வது கான்சால் பொது மாநாட்டுச் சந்திப்பில் இத்தகவல் அறிவிக்கப்பட்டது.

கான்சாலில் தற்போது பத்து நாடுகள் இடம்பெறுகின்றன. அவை சுழற்சி முறையில் அதை ஏற்று நடத்துகின்றன. கான்சால் 2028ன்போது, ஆண்டுதோறும் நடைபெறும் நிர்வாக வாரியச் சந்திப்புகளோடு தென்கிழக்காசிய நூலகங்களின் தொழிற்துறையினர் பங்கேற்கும் மாநாடும் நடைபெறும்.

கோலாலம்பூரில் நடைபெற்ற 19வது கான்சால் மாநாடு, ‘அனைவரையும் உள்ளடக்கும் அறிவு: பிரிவினைகளைக் கடப்பது, செயற்கை நுண்ணறிவை வலுப்படுத்துதல்’ எனும் கருவில் அமைந்தது.

அந்த மாநாட்டில் சிங்கப்பூரின் தேசிய நூலக, ஆவணக் கழகப் பிரதிநிதிகள், நம் நூலகங்களை மாற்றியமைப்பதில் - குறிப்பாக உடற்குறையுள்ளோருக்கு ஏற்றவகையில் மேம்படுத்துவதில் - பங்காளித்துவங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

வளரும் தொழில்நுட்பங்களால் மக்கள் கதைகளைப் படித்து உள்வாங்கும் விதத்தில் ஏற்பட்டுள்ள புதிய வாய்ப்புகளையும் அவர்கள் பகிர்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்