கம்போடிய மோசடிக் கும்பலுடன் தொடர்பு; மேலும் ஒருவர் கைது

2 mins read
b8124445-3e6a-4a31-b626-e13f6864ee04
மலேசியரான பெர்னார்ட் கோவை கைது செய்த சிங்கப்பூர் அதிகாரிகள். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

கம்போடிய மோசடிக் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் எனும் சந்தேகத்தின்பேரில் மேலும் ஓர் ஆடவரைச் சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

பெர்னார்ட் கோ யீ சென் என்னும் 24 வயது ஆடவர்மீது செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) குற்றஞ்சாட்டப்பட்டது.

சிங்கப்பூரர்களைக் குறிவைத்து கம்போடியாவில் மோசடிக் கும்பல் ஒன்று செயல்பட்டது. அதில் மொத்தம் 34 பேர் உள்ளனர். அவர்களில் ஏழு பேர் மலேசியர்கள். மற்றவர்கள் சிங்கப்பூரர்கள். அக்குழுவைச் சிங்கப்பூரர் ஒருவர் வழிநடத்தியுள்ளார்.

பெர்னார்ட் கோவையும் சேர்த்து இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 31 பேரை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

மலேசியரான பெர்னார்ட் தொலைபேசி அழைப்புகள்மூலம் மோசடி செய்யும் குழுவை மேற்பார்வையிட்டவர் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெர்னார்ட் மீதான நீதிமன்ற விசாரணை நவம்பர் 25ஆம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

பெர்னார்ட் சில நாள்களுக்கு முன்னர் கம்போடியாவில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்நிலையில் மலேசியக் காவல்துறையினர் பெர்னார்டை திங்கட்கிழமை சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கம்போடியாவில் செயல்பட்ட இந்தக் குற்றக் கும்பலின் தொடர்பில் குறைந்தது 438 மோசடிப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தக் கும்பலால் மட்டும் கிட்டத்தட்ட $41 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் காவல்துறையும் கம்போடிய தேசியக் காவல்துறையும் இணைந்து நடத்திய கூட்டு அமலாக்க நடவடிக்கை மூலம் குற்றக் கும்பலின் மோசடி நடவடிக்கை முடக்கப்பட்டது.

குற்றக் கும்பலுக்குத் தொடர்புடைய சொத்துகளை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

பெர்னார்ட் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 100,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்