கம்போடிய மோசடிக் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின்பேரில் சிங்கப்பூரர் இருவரைச் சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு ஆடவர்களும் தாய்லாந்து மற்றும் கம்போடியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள்.
வேன் சோ என்னும் 27 வயது ஆடவர் கம்போடியாவிலிருந்தும் பிரையன் சி என்னும் 32 வயது ஆடவர் தாய்லாந்திலிருந்தும் நாடுகடத்தப்பட்டனர் என்று சிங்கப்பூர் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) அறிக்கை வெளியிட்டது.
இரு ஆடவர்களும் ஞாயிற்றுக்கிழமை நாடுகடத்தப்பட்டனர் என்றும் சிங்கப்பூருக்கு வந்தவுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருவர்மீதும் திங்கட்கிழமை (நவம்பர் 17) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் குற்றக் கும்பலுடன் தொடர்புடைய 34 பேரைச் சிங்கப்பூர் காவல்துறை தேடிவருவதாக அது அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்தப் பட்டியலில் வேன் சோவும் பிரையன் சியும் இடம்பெற்றிருந்தனர்.
இரு ஆடவர்களும் கம்போடியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. அந்தக் குற்றக் கும்பல் சிங்கப்பூரர்களைக் குறிவைத்து மோசடிச் செயல்களை நடத்தியது.
அந்தக் குற்றக் கும்பலுக்கு மட்டும் தொடர்புடையதாகக் குறைந்தது 438 மோசடிப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தக் கும்பலால் மட்டும் கிட்டத்தட்ட $41 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் காவல்துறையும் கம்போடியத் தேசிய காவல்துறையும் இணைந்து நடத்திய கூட்டு அமலாக்க நடவடிக்கையால் குற்றக் கும்பலின் மோசடி நடவடிக்கை முடக்கப்பட்டது.
குற்றக் கும்பலுக்குத் தொடர்புடைய சொத்துகளை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

