பல்லாயிரம் பேர் பங்கேற்ற ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில் குடமுழுக்கு

ஏறத்தாழ 30,000 பேர் பங்கேற்பு

பல்லாயிரம் பேர் பங்கேற்ற ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில் குடமுழுக்கு

3 mins read
ca79f661-78b6-4a14-a11c-50246d728fab
காலை ஒன்பது மணியளவில் ஒரே நேரத்தில் கோபுரங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்த காட்சி. - படம்: த கவி

‘நமச்சிவாய’ எனும் மந்திரம் எங்கும் எதிரொலிக்க, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) காலை 9 மணியளவில் ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

காலை 4 மணிக்கு யாகசாலை வழிபாடுகள் தொடங்கி, கோ பூசை, தீபாராதனையை அடுத்து 8.50க்கு கடப் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மூன்று கடங்களைத் தலையில் சுமந்து கோபுரம் நோக்கிச் சென்றனர்.

சிவாச்சாரியார்கள் மூவர் கடம் ஏந்திக் கோவிலை வலம்வரும் காட்சி.
சிவாச்சாரியார்கள் மூவர் கடம் ஏந்திக் கோவிலை வலம்வரும் காட்சி. - படம்: த கவி

சரியாக 9 மணிக்கு ஏழடுக்கு கொண்ட ராஜகோபுரம், வடக்கு கோபுரம், விமானம், பிற சந்நிதி கோபுரங்களுக்கும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனையும் இடம்பெற்றது.

சிறப்பு விருந்தினரான வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்பளிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினரான வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்பளிக்கப்பட்டது. - படம்: த கவி

ஏறத்தாழ 30,000 பேர் பங்கேற்று இறை தரிசனம் செய்ய ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இக்குடமுழுக்கு விழாவில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

போக்குவரத்துத் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், வடமேற்கு வட்டார மேயர் அலெக்ஸ் யாம், வெளியுறவு, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் சுகர்னைன் அப்துல் ரஹிம், புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் லியாங் ஹெங் ஹூவா, மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெனி சோ, செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் ஜாஃபர், ஹாலந்து- புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் சியா உள்ளிட்ட அடித்தள அமைப்புகளின் ஆலோசகர்களும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

குடமுழுக்கு நிறைவுபெற்றுப் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில்.
குடமுழுக்கு நிறைவுபெற்றுப் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில். - படம்: த கவி

தீவெங்கிலும் உள்ள 25 கோவில்களிலிருந்தும், பாத்தாமில் உள்ள ஒரு கோவிலிலிருந்தும் சீர் வரிசை வைத்து, இக்குடமுழுக்கு விழாவுக்கு மரியாதை செய்யப்பட்டது.

“கிட்டத்தட்ட ஓராண்டுகாலமாக இதற்காகத் திட்டமிட்டு நிர்வாகக் குழு பணியாற்றியது. சிறிய நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தினோம். தொண்டூழியர்களும் கைகொடுத்தனர். இவ்விழா நல்லமுறையில் நடைபெற்றதற்குக் கூட்டு முயற்சிதான் காரணம்,” என்றார் கோவில் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த பகீரதி.

குடமுழுக்கைக் காணக் காத்திருந்த பக்தர் கூட்டம்.
குடமுழுக்கைக் காணக் காத்திருந்த பக்தர் கூட்டம். - படம்: த கவி

கடந்த 20 ஆண்டுகளாக இக்கோவிலுக்கு வரும் புக்கிட் பாஞ்சாங்கைச் சேர்ந்த பக்தர் சாந்தி, 58, “இக்கோவிலின் குடமுழுக்கை முதன்முறையாகப் பார்க்கிறேன். மழை இல்லாமல் வானிலை சிறப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி,” என்றார்.

வெளிநாட்டு ஊழியரான எஸ். பார்த்திபன் நள்ளிரவில் வந்து குடமுழுக்கைக் காணக் காத்திருந்தார். “கோவிலில் குடமுழுக்கு என்றவுடன், கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர்பார்த்தேன். அதனால் என் நண்பர்களுடன் இரவு முதல் காத்திருக்கத் தொடங்கினேன். முதல் வரிசையில் நின்று குடமுழுக்கைப் பார்த்ததில் மனநிறைவு,” என்றார் அவர்.

அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்த பக்தர்கள். - படம்: த கவி

கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக அன்னதானத்துக்குப் பதிலாக பிரசாதப் பொட்டலங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சமைத்து எடுத்துவரப்பட்ட மொத்தம் 1,000 கிலோ பிரசாதம், ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளாகப் பல்வேறு கோயில்களில் தொண்டூழியராகப் பணியாற்றும் ஆனந்தகுமார், 67, உணவுப் பொட்டலங்கள் தயார் செய்தல், விநியோகித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டார்.

“நாங்கள் ‘லொட்டஸ்’ எனும் 300 பேர் கொண்ட தொண்டூழியர் அணி. 80 பேர் உணவு சமைக்கும் இடத்திலும், 100 பேர் பொட்டலமிடுதல், விநியோகித்தல் ஆகிய பணிகளிலும் ஈடுபடுகிறோம். பெரிய விழாவுக்கு ஆதரவளிப்பதில் மகிழ்ச்சி,” என்றார்.

நெரிசலைத் தவிர்ப்பதற்காக அன்னதானத்துக்குப் பதிலாக பிரசாதங்கள் பொட்டலமாக வழங்கப்பட்டன. அப்பணிகளில் ஈடுபட்ட தொண்டூழியர்கள்.
நெரிசலைத் தவிர்ப்பதற்காக அன்னதானத்துக்குப் பதிலாக பிரசாதங்கள் பொட்டலமாக வழங்கப்பட்டன. அப்பணிகளில் ஈடுபட்ட தொண்டூழியர்கள். - படம்: த கவி

கோயிலுக்கு எதிரே அமைக்கப்பட்ட பிரசாதம் விநியோகிக்கும் இடத்தில் தொண்டூழியம் செய்த பரமசிவன், 60, “நாங்கள் காலை 6 மணிமுதல் உணவுப் பொட்டலங்கள் தயார் செய்தோம். கிட்டத்தட்ட 100 பேர் பணியாற்றினோம். சொந்தத் தொழில் செய்கிறேன். கிடைத்த நேரத்தில் இந்தப் பணியில் ஈடுபடுவது மனநிறைவளிக்கிறது,” என்றார்.

குடமுழுக்கு முடிந்தவுடன் இறைதரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
குடமுழுக்கு முடிந்தவுடன் இறைதரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள். - படம்: த கவி

கூட்ட நெரிசல் காரணமாக ஆங்காங்கே தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் வரிசையில் தரிசனம் செய்ய அனுப்பப்பட்டனர்.

அதனை நிர்வகிக்கும் பணியில் ஈடுபட்டார் சிவப்பிரகாஷ். அவர், “இதுபோன்ற விழாக்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, முறையான வரிசைகளில் பக்தர்களை அனுப்புவதில் எங்கள் குழுவுக்கு அனுபவம் உள்ளது. அதனைப் பகிர்ந்துகொள்வதிலும், உதவி செய்வதிலும் மகிழ்ச்சி. எங்களை அங்கீகரித்து விழாக்களுக்கு அணுகுவதும் ஒரு தனி உற்சாகம்,” என்றார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்