20,000 பக்தர்கள் பங்கேற்ற ஶ்ரீ சிவன் கோவில் குடமுழுக்கு விழா

2 mins read
652538d2-9ffc-416a-bf6f-78e28432bf00
கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றும் தருணம். - படம்: த.கவி
multi-img1 of 3

ஏறக்குறைய 20,000 பக்தர்களின் சிவமந்திர ஒலி கேலாங் ஈஸ்ட் பகுதியை நிறைக்க, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) காலை ஶ்ரீ சிவன் கோவில் குடமுழுக்கு விழா நடந்தேறியது.

“இன்றைய குடமுழுக்கு விழா மிகவும் முக்கியமானது. சிங்கப்பூர் இந்து சமயத்தினரிடையே இந்தத் திருத்தலத்திற்குச் சிறப்பிடம் உண்டு,” என்றார் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம்.

குடமுழுக்கு விழாவின் நினைவுச்சின்னத்தை திறந்துவைத்த அமைச்சர் கா.சண்முகம்.
குடமுழுக்கு விழாவின் நினைவுச்சின்னத்தை திறந்துவைத்த அமைச்சர் கா.சண்முகம். - படம்: த.கவி

அதிகாலை 4 மணிக்கு யாகசாலை வழிபாடுகள் தொடங்கின.

அப்போது பெய்த பெருமழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டனர்.

பிள்ளையார்பட்டி சிவஶ்ரீ டாக்டர் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு விழாவை வழிநடத்தினர்.

கொக்கறை, எக்காளம், தவண்டை, கொடு கொட்டி, நகரா ஆகிய தொன்மைமிக்க இசைக்கருவிகளின் கைலாய இசை கடப் புறப்பாட்டைச் சிறப்பித்தது. 

காலை 7.30 மணியளவில் கடங்கள் யாகசாலையிலிருந்து புறப்பட்டன. 

வேத மந்திரங்கள் முழங்க, விமானக் கலசத்திற்கு சரியாக 8.30 மணிக்குக் குடமுழுக்கு நடந்தது.

தொடர்ந்து மற்ற சன்னதிகளின் விமானக் கலசங்களுக்கும் குடமுழுக்கு செய்யப்பட்டது. 

- படம்: த.கவி
குடமுழுக்கு முடிந்தபின் கோவிலுக்குள் சென்று இறைவழிபாடு செய்வதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
குடமுழுக்கு முடிந்தபின் கோவிலுக்குள் சென்று இறைவழிபாடு செய்வதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள். - படம்: த.கவி
குடமுழுக்கு முடிந்தபின் கோவிலுக்குள் சென்று இறைவழிபாடு செய்வதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
குடமுழுக்கு முடிந்தபின் கோவிலுக்குள் சென்று இறைவழிபாடு செய்வதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள். - படம்: த.கவி
மூல தெய்வங்களுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை.
மூல தெய்வங்களுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை. - படம்: த.கவி

கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் 2,500 மேற்பட்ட தொண்டூழியர்கள் பங்கெடுத்தனர்.

மூத்தோர், சக்கர நாற்காலிப் பயனர்கள், உடற்குறையுள்ளோர் ஆகியோருக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

அவர்கள் கோயிலுக்குள் முதலில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் கட்டங்கட்டமாக கோயிலுக்குள் விடப்பட்டனர்.

குடமுழுக்கு விழாவுக்காகத் திரண்ட பெருங்கூட்டத்திற்கிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளைக் கட்டுப்படுத்த முயன்ற அதிகாரிகள்.
குடமுழுக்கு விழாவுக்காகத் திரண்ட பெருங்கூட்டத்திற்கிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளைக் கட்டுப்படுத்த முயன்ற அதிகாரிகள். - படம்: த.கவி
குடமுழுக்கு விழாவுக்காகத் திரண்ட பெருங்கூட்டத்திற்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
குடமுழுக்கு விழாவுக்காகத் திரண்ட பெருங்கூட்டத்திற்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. - படம்: த.கவி

எனினும், தடுப்புகளை மீறி முன்னேறிச் செல்லக் கூட்டத்தினர் சிலர் முண்டியடித்தனர்.

அதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கோயில் நிர்வாகத்தினர் ஒழுங்குகாக்கும்படி கேட்டுக்கொண்டும் நிலைமை சரியாகாததால் கலகத் தடுப்பு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

45 நிமிடத்துக்குள் நிலைமை சீரானது.

திடீரென அதிகமானோர் கோயிலுக்குள் செல்ல முற்பட்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டதாக இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

நெரிசலில் சிக்கிய சிலருக்கு உடனடி உதவி தேவைப்பட்டதாகவும் எனினும் எவருக்கும் காயம் இல்லை என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

சம்பவத்தைக் கடுமையானதாகக் கருதுவதாகவும் அதுகுறித்து விசாரனை நடுத்துவதாகவும் இந்து அறக்கட்டளை வாரியம் கூறியது.

கோயிலுக்கு அருகிலுள்ள திறந்தவெளியில் காலை 8.30 மணியளவில் அன்னதானம் தொடங்கியது. 

ஒரே நேரத்தில் 1,000 பேர் அமர்ந்து உணவருந்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. 

20,000க்கும் அதிகமானோருக்கு 800க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் உணவு வழங்கினர்.

“தொண்டூழியர்கள் மிகவும் பணிவன்பாக நடந்துகொண்டனர். குடமுழுக்கு விழா மிகுந்த மனநிறைவு தருவதாக இருந்தது”, என்றார் தோ பாயோவிலிருந்து வந்திருந்த திருவாட்டி விமலா கிருஷ்ணன், 87.

பக்தர்கள் செல்லும் வரிசையை மேலும் சிறப்பாக நிர்வகித்திருக்கலாம் என்று திருவாட்டி குமாரி முத்து, 63, கூறினார்.

கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2ல் அமைந்துள்ள ஶ்ரீ சிவன் கோவில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பல வண்ணங்களில் மிளர்கிறது.

குறிப்புச் சொற்கள்