பொதுத் துறை அமைப்புகள் குடிமக்களின் தனிப்பட்ட தரவை எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதை நிர்வகிக்கும் தற்போதைய சட்டங்களில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இது பொதுத் துறை அமைப்புகள் தனியார் துறையுடன் தரவைப் பகிர்ந்துகொள்ள வழி வகுக்கும்.
அரசாங்கத்துடன் பணிபுரியும் போது தங்களிடம் பகிர்ந்துகொள்ளப்பட்ட குடிமக்களின் தனிப்பட்ட தரவைத் தனியார் துறையைச் சேர்ந்த நபர்கள் தவறாகப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது குற்றவியல் தண்டனை விதிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
பொதுத் துறை ஊழியர்களைப் பொறுப்பேற்கச் செய்த சிங்ஹெல்த் நிறுவனத்தின் மிகப்பெரிய தரவு மீறலுக்குப் பிறகு, 2018ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட பொதுத்துறை ஆளுமைச் சட்டத்திற்கான (பிஎஸ்ஜிஏ) இந்த முன்மொழியப்பட்ட சட்டப் புதுப்பிப்புகள், செப்டம்பர் 2ஆம் தேதி நிறைவடையவிருக்கும் பொது ஆலோசனையில் விவாதிக்கப்படுகிறது.
“சிங்கப்பூருக்கு சிறந்த சேவைகளை வழங்க தரவுப் பயன்பாட்டை மேம்படுத்துவதே இந்தத் திருத்தங்களின் நோக்கமாகும்,” என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு, ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிடப்பட்ட அதன் ஆலோசனைக் கட்டுரையில் தெரிவித்துள்ளது.
முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பொது மற்றும் தனியார் துறைக்கு இடையேயான தரவுப் பகிர்வு குறித்து மேலும் தெளிவான விளக்கத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
பொதுமக்களுக்கு சேவை வழங்க அரசாங்கம் சமூகக் குழுக்கள் மற்றும் தனியார் துறையுடன் அதிகளவில் இணைந்து செயல்படுவதால் இது நிகழ்கிறது. மேலும் தனிநபர்கள் அல்லது வணிகங்கள் சம்பந்தப்பட்ட அரசு தரவுத் தொகுப்புகள் உண்மைகளையும் புள்ளிவிவரங்களையும் வெளிதரப்பினருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கலாம் என்று அமைச்சு மேலும் தெரிவித்தது.
உதாரணமாக, சமூக அமைப்புகள் தேவைப்படும் சிங்கப்பூரர்களுக்கு சமூக உதவிகளை வழங்க உதவுவதற்கு அல்லது வயதான குடியிருப்பாளர்களுக்கு சுகாதாரம் தொடர்பான ஆதரவை வழங்குவதற்கு, தகுதியான நபர்களின் பட்டியல்களை, அவர்களின் தொடர்பு மற்றும் தகுதி விவரங்களுடன் சரியான நேரத்தில், பொதுத்துறை துல்லியமாக அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கலாம்.
பொதுத்துறை ஆளுமைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்களுடன் பொதுத்துறை நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட வெளிப்புறப் பங்குகாரர்களுடன் தரவைப் பகிர்ந்து கொள்வதற்கான தெளிவான அடிப்படையை சட்டம் வழங்கும்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் திருத்தங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் பொதுத்துறை சார்பாக வழங்கும் சேவைகளுக்குத் தேவையான தரவைப் பெற வெளிப்புறப் பங்குதாரரை அங்கீகரிக்க உதவும்.
பொதுத்துறை அமைப்பின் அமைச்சர் அல்லது அத்தகைய அமைச்சரால் நியமிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர் தரவுப் பகிர்வை அங்கீகரிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத தரவுகளை வெளியிடுதல், தரவைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத தரவுகளிலிருந்து தனிநபர்களை மீண்டும் அடையாளம் காணுதல் போன்ற செயல்களை பொதுத்துறை ஆளுமைச் சட்டம் குற்றமாகக் கருதுகிறது. இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு $5,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறை ஆகியவை விதிக்கப்படலாம்.
பொதுமக்கள் செப்டம்பர் 2ஆம் தேதி, மாலை 5 மணி வரை முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்த தங்கள் கருத்துகளை https://go.gov.sg/feedbackpsga2025 வழியாகச் சமர்ப்பிக்கலாம்.