தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் பாருவிலிருந்து அதிகாலை 4 மணிக்கு பேருந்துச் சேவையைத் தொடங்க பரிசீலனை

2 mins read
93039d65-48d0-46fc-88a3-7b5d74af25c4
ஜோகூர் பாருவுக்குச் செல்ல உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் காஸ்வே லிங்க் பேருந்தில் ஏறும் பயணிகள். - படம்: சாவ்பாவ்

மலேசியாவின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் எல்லை தாண்டிய பேருந்துச் சேவையை ஒரு மணி நேரம் முன்னதாகத் தொடங்குவது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையமும் (எல்டிஏ) சிங்கப்பூர் பேருந்து நிறுவனங்களும் பரிசீலித்து வருகின்றன.

ஜூன் 17ஆம் தேதி மலேசியாவின் நிலப் பொதுப் போக்குவரத்து அமைப்பிடமிருந்து இந்தச் சேவை நேரத்தை முன்னதாக தொடங்குவது குறித்த கோரிக்கை வந்ததாக ஜூலை 29ஆம் தேதி நிலப் போக்குவரத்து ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது. மேலும், இதுகுறித்து பேருந்து நிறுவனங்களுடன் இணைந்து பரிசீலித்து வருவதாகவும் அது கூறியது.

எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி, சில தனியார் பேருந்து நிறுவனங்கள் இந்தப் பேருந்துச் சேவையை வழங்குகின்றன.

மலேசியச் செய்தி நாளேடான தி ஸ்டார் ஜூலை 24ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், சிங்கப்பூரின் பேருந்து நிறுவனங்கள் அதிகாலை 5 மணிக்குப் பதிலாக, 4 மணிக்கே சேவையைத் தொடங்கக் கோரி நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் நிலப் பொதுப் போக்குவரத்து அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டிருந்தது.

அதிகாலை 4 மணிக்கே ஜோகூர் பாரு சோதனைச்சாவடியில் சிங்கப்பூருக்குச் செல்லும் பயணிகளின் நீண்ட வரிசைகள் ஏற்படுவதால், சேவை நேரத்தை முன்னதாகத் தொடங்குவதன் மூலம் அதிகாலை நேர நெரிசலை சமாளிக்கலாம் என தாம் நம்புவதாக ஜோகூர் மாநிலப் பொதுப் பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு குழுத் தலைவர் முகம்மது ஃபாஸ்லி முகம்மது சல்லே கூறியதை தி ஸ்டார் மேற்கோள் காட்டியது.

தற்போது, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் ஜோகூர் பாரு சோதனைச்சாவடியிலிருந்து சேவை எண் 160ஐ இயக்குகிறது. வாரநாள்களில் அதிகாலை 5 மணிக்கும் வாரயிறுதி நாள்கள் அல்லது பொது விடுமுறை நாள்களில் காலை 5.50 மணிக்கும் இந்தப் பேருந்துகள் புறப்படுகின்றன.

மேலும், ஜோகூர் பாருவின் லார்க்கின் முனையத்திலிருந்து ஜாலான் புசார் அருகில் உள்ள குவீன் ஸ்திரீட் முனையம் வரை சேவை எண் 170ஐ எஸ்பிஎஸ் டிரான்சிட் இயக்குகிறது. வாரநாள்களில் அதிகாலை 5.20 மணிக்கும் வாரயிறுதி நாள்கள் அல்லது பொது விடுமுறை நாள்களில் 5.30 மணிக்கும் இது புறப்படுகிறது.

சேவை எண் 170ன் ஒரு பகுதியை உள்ளடக்கிய துணைச் சேவை எண்ணான 170Xவும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. வாரநாள்களில் ஜோகூர் பாருவிலிருந்து முதல் பேருந்து காலை 8.28 மணிக்கு புறப்படுகிறது.

இதுதவிர, எஸ்எம்ஆர்டி நிறுவனம் சேவை எண் 950ஐ ஜோகூர் பாரு சோதனைச் சாவடியிலிருந்து உட்லண்ட்ஸ் தற்காலிகப் பேருந்து முனையம் வரை இயக்குகிறது. ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் இந்தச் சேவைக்கான தொடக்க நேரம் குறித்த தகவல்கள் இல்லை. எனினும், உட்லண்ட்சிலிருந்து ஜோகூர் பாருவுக்குச் செல்லும் சேவை தினமும் காலை 5.30 மணிக்குத் தொடங்குகிறது.

சிங்கப்பூர்-ஜோகூர் எக்ஸ்பிரஸ், ரைட்வெல் டிராவல், டிரான்ஸ்டார் டிராவல் போன்ற பிற தனியார் பேருந்து நிறுவனங்களும் லார்க்கின் பேருந்து முனையம், ஜோகூர் பாரு சோதனைச்சாவடியிலிருந்து சிங்கப்பூருக்குச் சேவைகளை வழங்குகின்றன.

குறிப்புச் சொற்கள்