நாடாளுமன்ற நியமன உறுப்பினர் (என்எம்பி) தமது பதவியிலிருந்து விலகிய பிறகு ஓர் அரசியல் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடச் சிங்கப்பூர் அரசமைப்புச் சட்டத்தில் இடம் உண்டு என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
“ஒருவர் நாடாளுமன்ற நியமன உறுப்பினராக இருக்கும்போது நாடாளுமன்றத்தில் சுயமாகச் செயல்பட வேண்டும். அதற்கு எந்த இடையூறும் இருக்காது,” என்பதை அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.
திங்கட்கிழமை (மார்ச் 31) நோன்புப் பெருநாளையொட்டி அகமது இப்ராகிம் பள்ளிவாசலுக்குச் சென்றபோது திரு சண்முகம் இதைத் தெரிவித்தார்.
அண்மையில் நாடாளுமன்ற நியமன உறுப்பினர்கள் ராஜ் ஜோஷுவா தாமசும், சையது ஹாருன் அல்ஹாப்ஷியும் அவர்களது பதவியிலிருந்து விலகினர்.
பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே பதவியிலிருந்து விலகினர். மேலும் அவர்கள் மக்கள் செயல் கட்சிக்காக எதிர்வரும் தேர்தலில் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் சில கேள்விகளை எழுப்பியது.
இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சர் சண்முகம் விளக்கம் கொடுத்துள்ளார்.
“நாடாளுமன்ற நியமன உறுப்பினர்களுக்குத் தகுதி இருந்தால் அவர்கள் அமைச்சர்கள் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்பது குறித்து முன்னாள் பிரதமர் லீ குவான் யூ பேசியுள்ளார்.
“மேலும், சிங்கப்பூர் அரசமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற நியமன உறுப்பினர்கள் ஓர் அரசியல் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட இடம் இருப்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது,” என்றார் அமைச்சர் சண்முகம்.
தொடர்புடைய செய்திகள்
1990ஆம் ஆண்டு நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திட்டம் அங்கீகரிக்கப்பட்டபோது நாடாளுமன்றத்தில் தாமும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் இருந்ததை அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.
“நாடாளுமன்றத்தில் பல்வேறு தரப்புகளின் குரல்கள் இருக்க வேண்டும் என்பதை அறிந்து நாடாளுமன்ற நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அதை வலுவாக ஆதரிக்கிறேன்,” என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.