சிறிய தனியார் வீட்டுத் திட்டங்களில் கட்டுமானத் தரம் குறைவாகவும் வேலைப்பாடு குறைபாடுகள் அதிகமாக இருப்பதையும் கட்டட, கட்டுமான வாரியத்தின் (பிசிஏ) புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கடந்த ஆறு ஆண்டுகளில் கட்டுமானத் தரவரிசையில் குறைந்த மதிப்பீடுகளைப் பெற்ற தனியார் வீட்டுத் திட்டங்களில் 58 விழுக்காட்டிற்கும் அதிகமானவை சிறிய தனியார் கட்டுமானத் திட்டங்களாகும். ஐம்பதுக்கும் குறைவான வீடுகளைக் கொண்டவை சிறிய தனியார் கட்டுமானத் திட்டங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
இந்தக் காலகட்டத்தில், கட்டுமானத் தர மதிப்பீட்டு முறையின்கீழ் மொத்தம் 167 திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்தத் திட்டத்தில், கட்டுமான வேலைப்பாடு, தண்ணீர்க் கசிவு, விரிசலடைந்த தரை உள்ளிட்ட முக்கியக் குறைபாடுகளைக் கண்டறிந்து மதிப்பிடப்படுகிறது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டின் கேள்விக்குப் பதிலளித்த பிசிஏ, இந்தத் திட்டங்களில் 48 திட்டங்கள் மிகக்குறைந்த தரத்தைக் குறிக்கும் நான்கு முதல் ஆறு வரையிலான பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவற்றில் 28 திட்டங்கள் சிறிய அடுக்குமாடி குடியிருப்புகள் என்றும் தெரிவித்தது.
இதற்கு நேர்மாறாக, 119 திட்டங்கள் ஒன்று முதல் மூன்று வரையிலான நல்ல தரவரிசைப் பிரிவில் இடம்பிடித்துள்ளன.
இவை சிறந்த முறையில் கட்டப்பட்டவை, மிகக் குறைவான குறைபாடுகளைக் கொண்டவை ஆகும்.
தனிப்பட்ட திட்டங்கள் மட்டுமின்றி, கட்டுமான நிறுவனங்களுக்கும் பிசிஏ தரவரிசைகளை வழங்குகிறது.
பிரிவு 1ல் உள்ள ஒரு முன்னணிக் கட்டுமான நிறுவனம் கட்டும் ஒவ்வொரு 1,000 வீடுகளில், குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட பிறகு ஒரு வீட்டிற்கும் குறைவாகவே குறைபாடுகள் பதிவாகின்றன.
ஆனால், பிரிவு 6ல் உள்ள நிறுவனங்கள் கட்டும் வீடுகளில், ஒவ்வொரு 1,000 வீடுகளுக்கும் 80 வீடுகளில் குறைபாடுகள் இருப்பதாக வாரியம் தெரிவித்தது.
பாதுகாப்பற்ற அல்லது அடுத்தடுத்து குறைபாடுகள் நிறைந்த வீடுகளைக் கட்டும் நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை குடியிருப்புக்கான அரசு நில விற்பனையில் பங்கேற்கத் தடை விதிக்கப்படுகிறது.
இது, கட்டுமானக் குறைபாடுகள் கொண்ட நிறுவனங்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாகவும் வீடு வாங்குபவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பாகவும் அமைகிறது.
1989ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தரம் கண்டறியும் சோதனை, அரசாங்க நில விற்பனைத் திட்டங்களுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தச் சோதனைக்கு உட்படாத கட்டுமான நிறுவனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு திட்டத்திலாவது 4, 5, அல்லது 6 ஆகிய குறைந்த தரவரிசையைப் பெற்ற நிறுவனங்களும் இச்சோதனைக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகும்.
சன்னல் கண்ணாடி, குளியலறைத் தடுப்புக் கண்ணாடி ஆகியவற்றில் விரிசல் அல்லது உடைப்பு ஏற்படுதல், தரையில் விரிசல் அல்லது வெடிப்பு ஏற்படுதல், கதவுக் கைப்பிடிகள், அலமாரிப் பிடிப்புகளில் முக்கியப் பொருள்கள் விடுபட்டிருப்பது அல்லது உடைந்திருப்பது, பிசிஏ அதிகாரிகள் நேரடியாகச் செய்யும் ஆய்வுகளின்போது அல்லது வீடுகள் ஒப்படைக்கப்பட்ட பிறகு வீட்டு உரிமையாளர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் இந்தத் தரவரிசைப் பிரிவுகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
ஈரப்பதம் உள்ள இடங்களில் நீர்க் கசிவைத் தடுக்கும் ‘வாட்டர் புரூஃபிங்’ வேலைகள் சரியாகச் செய்யப்பட்டுள்ளதா என்பதற்கான சோதனைகளும் இதில் அடங்கும்.

