சாங்கி விமான நிலைய 5ஆம் முனையத்தின் கட்டுமானப் பணிகள் 2025ஆம் ஆண்டு முதல் பாதியில் தொடங்கும்.
முனையம் 5ன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து அது 2030களின் மத்திம பகுதியில் நடப்புக்கு வரும்போது சிங்கப்பூரை உலகின் 200 நகரங்களுக்கும் அதிகமானவற்றுடன் இணைக்க வேண்டும் என்பதே இலக்கு. இதைத் தெரிவித்த பிரதமர் லாரன்ஸ் வோங், தற்போதைய நிலையில் சிங்கப்பூர் உலகின் கிட்டத்தட்ட 150 நாடுகளுடன் ஆகாய வழி இணைப்பைக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் 40 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்து நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6ஆம் தேதி) அன்று சிறப்பு உரையாற்றிய பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விமானப் போக்குவரத்து துறையில் போட்டித்தன்மை அதிகரித்துவரும் நிலையில், சிங்கப்பூர் அதில் முன்னிலை வகிப்பதில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் விளக்கினார்.
“இவ்வட்டாரத்தில், அதைத் தாண்டியும் உள்ள நாடுகள் தங்கள் விமானக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் அதன்மூலம் அதிக விமானப் போக்குவரத்தை அதிகரிக்க முற்படுகின்றன. சில நாடுகள் ஆண்டு ஒன்றுக்கு 100 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய மிகப் பெரும் விமான நிலையத்தை அமைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளன. இந்த நாடுகள் சிங்கப்பூருடன் தங்களுக்கு இருக்கும் இடைவெளியைக் குறைத்துக்கொண்டு வருகின்றன.
“பல விமானச் சேவை நிறுவனங்கள் தங்கள் விமானங்களின் எண்ணிக்கையையும் இணைப்பு வட்டத்தையும் விரிவுபடுத்தி வருவதுடன் நேரடி விமானச் சேவையையும் அதிகரித்து வருகின்றன. இதனால், பல விமானப் பயணங்கள் இனி சாங்கி விமான நிலையம் வழியாக செல்ல வேண்டிய தேவை இருக்காது.
“நமது சாதனைகளை நாம் கொண்டாடும் அதே வேளையில் அதில் மட்டுமே நாம் மூழ்கியிருக்கலாகாது,” என்று ஷங்ரிலா ஹோட்டலில் இரவு விருந்து உண்ணக் கூடியிருந்த கிட்டத்தட்ட 800 விருந்தினர்களிடம் பிரதமர் விளக்கினார். விமானத் துறைத் தலைவர்கள், முன்னாள், இந்நாள் சிவில் விமானப் போக்குவரத்து ஊழியர்கள், மூத்த அரசு அதிகாரிகள் ஆகியோர் இந்த விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கூடியிருந்தனர்.
சிங்கப்பூர் விமான நிலையங்கள் தற்பொழுது உலகின் கிட்டத்தட்ட 150 நகரங்களுடன் நன்கு இணைந்திருக்கும் நிலையில், இதை விரிவுபடுத்துவதே இலக்கு என்று பிரதமர் வோங் கூறினார். இது சிங்கப்பூருக்கு மேலும் அதிகமான பயணிகளை ஈர்ப்பதுடன் பரந்த ஆகாயத் துறைக்கான தேவையை உருவாக்கும் என்றார் பிரதமர்.
சாங்கி விமான நிலையம் தற்பொழுது 90 மில்லியன் பயணிகளைக் கையாளும் நிலையில், முனையம் 5ன் மூலம் மேலும் 50 மில்லியன் பயணிகளைக் கையாள இயலும். இது கூடுதல் இணைப்பு வசதியை ஏற்படுத்தி, பயணிகளின் அனுபவத்தில் ஒரு மாற்றத்தைத் தருவதுடன் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று பிரதமர் விளக்கினார்.

