டௌன்டவுன் ரயில் பாதை விரிவாக்கம்; 3ஆம் காலாண்டில் தொடங்கும் சுரங்கப்பாதைக் கட்டுமானப் பணிகள்

டௌன்டவுன் ரயில் பாதை விரிவாக்கம்; 3ஆம் காலாண்டில் தொடங்கும் சுரங்கப்பாதைக் கட்டுமானப் பணிகள்

2 mins read
5d55d7af-4baa-4948-95a6-1110985dfab8
புக்கிட் பாஞ்சாங் நிலையத்திற்குப் பிறகு வரும் புதிய ‘டௌன்டவுன் லைன்’ ரயில் நிலையத்துக்கான சித்திரிப்புப் படம். - சித்திரிப்பு: நிலப் போக்குவரத்து ஆணையம்

டௌன்டவுன் ரயில் பாதையின் இரண்டாம் விரிவாக்கத்துக்கான இறுதி ஒப்பந்தம் சீன நிறுவனத்தின் உள்ளூர்க் கிளை ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஒட்டுமொத்தத் திட்டத்துக்கான மொத்தச் செலவு கிட்டத்தட்ட $1.26 பில்லியன் என்று தெரிவிக்கப்பட்டது.

ஏறக்குறைய $199 மில்லியன் மதிப்பிலான அந்த இறுதி ஒப்பந்தத்தின்படி, ‘சைனா ரயில்வே டன்னல் குரூப்’ நிறுவனம், தற்போதைய புக்கிட் பாஞ்சாங் நிலையத்திற்கும் சுங்கை காடூட் அவென்யூவில் அமையவிருக்கும் DE1 நிலையத்திற்கும் இடையிலான சுரங்கப்பாதைகளை வடிவமைத்துக் கட்டும்.

நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (மார்ச் 16) அந்தத் தகவல்களைத் தெரிவித்தது.

உட்லண்ட்ஸ் சாலைக்குக் கீழ் கட்டப்படவிருக்கும் கிட்டத்தட்ட 1.8 கிலோமீட்டர் நீளமுள்ள இரட்டைச் சுரங்கப்பாதைகள், கிராஞ்சி விரைவுச்சாலை மேம்பாலம் போன்ற கட்டமைப்பைத் தாண்டிச் செல்லும் வகையில் அமைந்திருக்கும்.

இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் அதற்கான பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய ரயில்வே அமைப்புகள் மற்றும் டௌன்டவுன் ரயில் பாதையில் செல்லும் பயணிகள் மீதான தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில், ரயில் பாதை செயல்படாத நேரத்தில் நுட்பமான பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய, வெவ்வேறு அமைப்புகளுடனும் ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ நிறுவனத்துடனும் ஒருங்கிணைந்துச் செயல்படப்போவதாக ஆணையம் கூறியது.

சுரங்கப்பாதைக் கட்டுமானம், புக்கிட் பாஞ்சாங் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இருப்பதால், அவை வரையறுக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.

நிகழ்நேரக் கண்காணிப்பின்மூலம் நிலத்தின் நிலையையும் பணிகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதையும் உறுதிசெய்ய, ஒப்பந்ததாரர்களுடன் இணைந்துப் பணியாற்றப்போவதாக ஆணையம் கூறியது.

தற்போது ஆணையமும் ‘சைனா ரயில்வே டன்னல் குரூப்’ நிறுவனமும் பிரின்ஸ் எட்வர்ட் ரயில் நிலையத்துக்கான கட்டுமானத்தில் செயல்பட்டுவருகின்றன.

குடியிருப்பாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் தகுந்த தகவல்கள் வழங்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.

டௌன்டவுன் ரயில் பாதை விரிவாக்கத்துக்கான பயணிகள் சேவை 2035ஆம் ஆண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்