மதுபோதையில் இருந்த இந்திய கட்டுமான ஊழியர் ஒருவரை சிங்கப்பூர் ஆற்றுக்குள் தள்ளிவிட்ட குற்றத்திற்காக இந்தியாவைச் சேர்ந்த 22 வயது மாணவருக்கு 35 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
லேகா பவன் என்னும் அந்த மாணவர் கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி ஜஸ்பீர் சிங், 33, என்பவருக்கு, வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
ஆற்றுக்குள் விழுந்து மூழ்கிய ஜஸ்பீர் சிங்கிற்கு ஏற்பட்ட காயங்கள் கடுமையானவையாக மாறியதைத் தொடர்ந்து அவர், பின்னர் உயிரிழந்தார்.
முன்னதாக, மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்குக் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக லேகா பவன் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
பின்னர் அந்தக் குற்றச்சாட்டு குறைக்கப்பட்டது. அதேவேளை, அவர்மீது சுமத்தப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டு தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில் கொள்ளப்பட்டது.
உட்லண்ட்ஸில் பல்வேறு நண்பர்களுடன் தங்கியிருந்த லேகா பவன், 2024 ஜூன் 30 மாலை நேரம் கிளார்க் கீ வட்டாரத்திற்குச் சென்றார். நண்பர்களும் உடன் சென்றனர்.
சிங்கப்பூர் ஆற்றின் ஒரத்தில் அமர்ந்து அவர்கள் மது அருந்தினர். இரவு 10 மணி அளவில் நண்பர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டு, சரியானது. அவர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகில் இருந்த மின்கம்பத்தை ஜஸ்பீர் சிங் கட்டிப்பிடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவரும் மதுபோதையில் இருந்தார்.
இரவு 10.30 மணியளவில் சிங்கை அணுகிய லேகா, அவருடன் பேசிக்கொண்டு இருந்தார். திடீரென்று, சிங்கின் நெஞ்சுப் பகுதியை லேகா தமது இரு கைகளால் தள்ளினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆற்றின் கரை விளிம்பில் நின்றிருந்த சிங், தடுமாறி படிகளில் உருண்டு ஆற்றுக்குள் விழுந்தார்.
நீரில் மூழ்கிய அவரை 2024 ஜூலை 1 அதிகாலை 2 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேரிடர் மீட்பு உதவிக் குழு மீட்டது.
அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
சம்பவத்துக்குப் பின்னர், ரயிலில் தப்பிய லேகா மறுநாள் காலை 8 மணியளவில் தமது அறைக்குச் சென்றபோது காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
சிங்கிற்கும் லேகாவுக்கும் அறிமுகம் இல்லை. சிங்கப்பூரில் கட்டுமான ஊழியராக வேலை செய்த சிங்கிற்கு இந்தியாவில் மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். அந்தக் குடும்பம் சிங்கின் வருமானத்தை நம்பியே இருந்தது.
மூன்று மாதங்களுக்கு முன்னர் தமது தாயார் இறந்ததில் இருந்து சிங் அதிகமாகக் குடிக்கத் தொடங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குடிபோதையில் சிங் இருந்தது தெரிந்தும் லேகா அவரை தள்ளிவிட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
லேகாவைத் தற்காத்து வாதாடிய வழக்கறிஞர் சிம்ரன் கோர் சந்து, “லேகாவும் சிங்கும் குடிபோதையில் இருந்தனர். சம்பவத்தில் ஆயுதம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. தள்ளிவிட்டது இயல்பானது. பாதிக்கப்படக்கூடிய எந்த ஒரு உடல்பாகத்தையும் குறிவைத்து நடைபெற்ற செய்கை அல்ல,” என்றார்.

