சாங்கியில் உள்ள கட்டுமானத் தளத்தில் பின்பக்கமாகச் செலுத்தப்பட்ட குப்பை லாரி மோதியதில் சீனாவைச் சேர்ந்த 35 வயது ஊழியர் உயிரிழந்தார்.
ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே அவர் மாண்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
தானா மேரா கோஸ்ட் ரோட்டிற்கும் சாங்கி ஈஸ்ட் டிரைவிற்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் மாலை 5.50 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்தது.
உயிரிழந்த ஆடவர், ஹுவா ஹாவ் டெவலப்மென்ட் நிறுவனத்தின் ஊழியர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர்கள் பரிசோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்ததாகக் கூறப்பட்டது.
இதன் தொடர்பில் கவனமின்றிச் செயல்பட்டதாக 36 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
அந்த வேலையிடத்தில், வாகனங்களும் நடந்துசெல்வோரும் பாதுகாப்பாகச் செயல்படுவதை முன்னிட்டுப் பொதுவான பாதுகாப்பு நடவடிக்கையாக, போக்குவரத்து நிர்வாகத் திட்டம் ஒன்று பின்பற்றப்பட வேண்டியது கட்டாயம் என்று மனிதவள அமைச்சு கூறியது. தேவைப்பட்டால் பின்புறமாகச் செலுத்தப்படும் பெரிய வாகனங்களுக்கு வழிகாட்ட பயிற்சி பெற்ற ஊழியர் ஒருவர் பணியமர்த்தப்படுவதும் அதில் அடங்கும் என்று அமைச்சு சொன்னது.
மேல்விவரங்களுக்கு, அந்த வேலையிடத்தில் செயல்படும் ‘ஹுவாடியோங் கான்ட்ராக்டர்’ நிறுவனத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.