கட்டுமானத் தளத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஊழியர் ஒருவர் ஏறத்தாழ இரண்டு மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து காயமடைந்தார்.
அக்டோபர் 10ஆம் தேதி இரவு 8.20 மணி அளவில் உட்லண்ட்ஸ் நார்த் வட்டாரத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இந்தத் தகவலை நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டது.
ஊழியர்களின் பாதுகாப்பை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க எடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை மறுஆய்வு செய்யவும், மேம்படுத்தவும் அந்தக் கட்டுமானத் தளத்தில் தற்காலிக வேலை நிறுத்தத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தக் கட்டுமானப் பணிகளின் பிரதான ஒப்பந்ததாரர் ஜப்பானைச் சேர்ந்த பென்டா-ஓஷியன் கன்ஸ்டிரக்ஷன் நிறுவனமாகும்.
சம்பவம் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக நிறுவனம் கூறியது.
அக்டோபர் 10ஆம் தேதி இரவு 9 மணி அளவில் 49A உட்லண்ட்ஸ் அவென்யூ 9ல் அமைந்துள்ள பென்டா-ஓஷியன் கன்ஸ்டிரக்ஷன் நிறுவனத்தின் கட்டுமானத் தள அலுவலகத்திலிருந்து உதவி கேட்டு அழைப்பு கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
காயம் அடைந்த ஊழியர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
அந்த ஊழியரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக ஆணையம் தெரிவித்தது.
இந்தச் சம்பவம் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை நடத்துகிறது.

