சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி வரும் மோசடி மின்னஞ்சல்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
“தங்கள் சங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் எனக்கூறி மோசடிக்காரர்கள் மின்னஞ்சல்கள் அனுப்புகின்றனர். அதில் சில மின்னஞ்சல்களில் வாடிக்கையாளர்கள் இழப்பீடு பெறத் தகுதி பெற்றுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
“பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையை முடிக்க, பெறுநர்களை ஓர் இணைப்பைப் பின் தொடர மோசடிக்காரர்கள் அறிவுறுத்துவர். அந்தப் படிவத்தில் தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறும் மற்ற பிற செயல்களைச் செய்யுமாறும் கேட்கப்படுவார்கள்.
“ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று சமூக ஊடகப் பதிவில் வலியுறுத்தியது பயனீட்டாளர் சங்கம்.
“மின்னஞ்சல் முகவரிகளைக் கவனமாகச் சரிபார்க்க வேண்டும் என்றும் அது அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரியா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்,” என்று பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொண்டது.
சந்தேகத்திற்குரிய இணைப்புகளைப் பின்தொடர்வதையும் கோப்புகளைத் திறப்பதையும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மின்னஞ்சல் குறித்து சந்தேகம் உள்ளவர்கள், அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க 6277-5100 என்ற எண்ணுக்கு அழைத்து உறுதிசெய்யலாம்.


