பானம் தயாரிக்கும் சிறு நிறுவனங்களுக்கு ஆதரவு

பானக் கலன்களைத் திருப்பிக் கொடுக்கும் திட்டத்தின்கீழ் மாற்றங்கள் பல ஏற்படும்

பானம் தயாரிக்கும் சிறு நிறுவனங்களுக்கு ஆதரவு

2 mins read
7219c320-87c0-42d2-a1ea-af5e64120b5b
போத்தல்களைப் போட்டவுடன், இவ்வியந்திரம் அவற்றை நசுக்கி, உள்ளிருக்கும் தொட்டியில் போடும். இதனைச் சேகரிக்கும் ஊழியர்களுக்கு உதவும் வகையில் இத்தொட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. - படம்: சாவ்பாவ்

பானக் கலன்களைத் திருப்பிக் கொடுக்கும் திட்டத்தின் செயல்பாட்டில் சிறு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கப்படவுள்ளது.

கலன்களைத் திருப்பிக் கொடுக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டபின் அவற்றில் சிறப்புக் குறியிடப்பட்ட கலன்களை மட்டுமே திருப்பிக் கொடுக்க முடியும்.

இதற்கு, ஒவ்வொரு பானக் கலனிலும் தனித்தனிக் குறியீடுகள் அச்சிடப்படவேண்டும். முதற்கட்டமாகத் தற்போது, குறிப்பிட்ட சில வகை பானக் கலன்களில் குறியீடுகள் நேரடியாக அச்சிடப்படவுள்ளன. இந்த மாற்றத்திற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்ட உதவும் வகையில் நிறுவனங்களுக்கு 2,500 வெள்ளி வரை மானியம் அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு கலனிலும் தனிப்பட்ட குறியீடு அச்சிடப்பட்டு அவை மட்டுமே இத்திட்டத்தின்கீழ் 10 காசுகளுக்குத் தகுதிபெறும்.
ஒவ்வொரு கலனிலும் தனிப்பட்ட குறியீடு அச்சிடப்பட்டு அவை மட்டுமே இத்திட்டத்தின்கீழ் 10 காசுகளுக்குத் தகுதிபெறும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தற்போது, ஆண்டுக்கு 50,000க்கும் குறைவான எண்ணிக்கையில் பானங்கள் தயாரிக்கும் சிறிய நிறுவனங்களுக்கு, ஒவ்வொரு கலனையும் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தகுதிபெறும் நிறுவனங்கள், அதற்குப் பதிலாக வரிசை எண்கள், குறியீடுகளுடன் கூடிய ஒட்டுவில்லைகளைப் பெறலாம். இதற்கும் அந்த மானியத்தைப் பயன்படுத்த முடியும். முதலில் அலுமினியக் கலன்கள் இதற்குத் தகுதிபெறுகின்றன. 50 முதல் 100 சிறு நிறுவனங்கள் இதற்குத் தகுதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன் பொங்கோல் வளாகத்தில் புதன்கிழமை (மார்ச் 18) நடைபெற்ற ஊடகங்களுக்கான இயந்திரப் பயன்பாட்டு விளக்க நிகழ்ச்சியில் இந்தக் குறியீடு தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இயந்திரச் செயல்பாடு

விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறத் துறை மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி. திட்டத்தின் தலைமை நிர்வாகி ஸ்டெஃபனி யிப் உடன் உள்ளார்.
விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறத் துறை மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி. திட்டத்தின் தலைமை நிர்வாகி ஸ்டெஃபனி யிப் உடன் உள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசியச் சுற்றுப்புற வாரியத்தின்கீழ் செயல்படும் இத்திட்டத்தில், 150 மி.லி. முதல் 3 லிட்டர் வரையிலான, குறியிடப்பட்ட கலன்களைத் திருப்பிக் கொடுத்து ஒவ்வொரு கலனுக்கும் 10 காசு திரும்பப் பெறலாம்.

அத்தொகையை, இஸி-லிங்க் அட்டை அல்லது பே-லா முறையில் பெறலாம். இவ்வியந்திரங்களை ஆங்கிலம் மட்டுமன்றி, தமிழ், மலாய், சீன மொழிகளில் பயன்படுத்தலாம்.

போத்தல்களைப் போட்டவுடன், இவ்வியந்திரம் அவற்றை நசுக்கி, உள்ளிருக்கும் தொட்டியில் போடும். அத்தொட்டி நிரம்பும்போது உரிய ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தும். அவற்றை அப்புறப்படுத்தும் ஊழியர்களுக்கு உதவும் வகையில் இத்தொட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

உணவங்காடிப் பதிவுகள்

இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் உணவங்காடிகள், அங்கு அமர்ந்து உணவருந்தும் வாடிக்கையாளர்களிடம் 10 காசு கூடுதலாக வசூலிக்காமல், அவர்களிடமிருந்து அக்கலன்களைத் திரும்பப் பெற முடியும்.

இதில் பங்கேற்கும் கடைகளைத் தனிப்பட்ட குறியீட்டின் மூலம் அறியலாம்.

இதுவரை கிட்டத்தட்ட 500 கடைகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன.

இயந்திர எண்ணிக்கை

இவ்வாண்டுக்குள் மொத்தம் 2,000 இயந்திரங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 430 கடைகள், பேரங்காடிகளில் இவ்வியந்திரங்கள் அமைந்திருக்கும். நகர மன்றம் நிர்வகிக்கும் 610க்கும் அதிகமான இடங்கள், மக்கள் வருகை அதிகமுள்ள 17 உணவங்காடி நிலையங்கள் ஆகியவற்றிலும் இயந்திரங்கள் நிறுவப்பட்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.

அடுத்தடுத்த மாதங்களில் உயர்கல்விக் கழகங்களிலும் மக்கள் கூடும் மேலும் 36 இடங்களிலும் இவை நிறுவப்படும்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பொங்கோல் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுத் துணைத்தலைவர் ‌ஷீலா கணே‌ஷ், 51, “நீடித்த நிலைத்தன்மைக்குப் பங்களிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த இயந்திரத்தைப் பயன்படுத்த ஆவலாக உள்ளது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்