சரக்குக் கப்பல் கொள்கலன்களுக்கான விலையை நிர்ணயிப்பதில் சதி செய்ததாக அமெரிக்காவில் ஏழு கப்பல் கொள்கலன் நிறுவனங்களின் நிர்வாகிகள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் சரக்குக் கப்பல் வர்த்தகத்தில் முன்னணி வகுப்போரில் திரு டியோ சியோங் செங்கும் ஒருவர்.
அந்த ஏழு பேரும் 2019 நவம்பர் முதல் 2024 ஜனவரி வரை போலி விலை நிர்ணயக் குற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது.
அதன் காரணமாக, 2019ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சரக்குக் கப்பல் கொள்கலன்களின் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பானதாக அமெரிக்க நீதித்துறை கடந்த செவ்வாய்க்கிழமை (மே 19) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடியின்போது, உலகின் ஆகப் பெரிய சரக்குக் கொள்கலன் உற்பத்தி நிறுவனங்களில் நான்கின் லாபம் நூறு மடங்கு அதிகரிக்க அந்தச் சதித் திட்டம் உதவியதாகவும் நீதித்துறை தெரிவித்துள்ளது.
அந்நிறுவனங்களில் ஒன்று திரு டியோ தலைமை நிர்வாகியாக இருக்கும் சிங்கமாஸ் கன்டெய்னர் ஹோல்டிங்ஸ்.
2019ஆம் ஆண்டு US$110 மில்லியன் இழப்பைச் சந்தித்த அந்நிறுவனம், அடுத்த ஈராண்டுகளில் அதாவது 2021ஆம் ஆண்டில் US$186.8 மில்லியன் லாபம் ஈட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

