பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கிற்கும் மீடியாகார்ப் நிறுவனத்திற்கும் அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்பியுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்காக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) அவ்வாறு எச்சரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
அண்மையில், திரு பிரித்தம் சிங், மீடியாகார்ப்பின் ‘சிஎன்ஏ’ தொலைக்காட்சியின் ‘தி அஸெம்பிலி’ (The Assembly) நிகழ்ச்சிக்கு நேர்காணல் அளித்திருந்தார். அது கடந்த நவம்பர் 5ஆம் தேதி ஒளிபரப்பானது.
நேர்காணலின்போது நாடாளுமன்றத்தில் பொய் சாட்சி கூறிய வழக்கு தொடர்பில் திரு சிங்கிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
உலகில் உள்ள எந்த நீதிமன்றத்தைக் காட்டிலும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத்தான் தாம் பெரிதாக நம்புவதாகத் திரு சிங் அதற்குப் பதிலளித்தார்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் பொய் சாட்சி கூறிய வழக்கில் திரு சிங் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் பிறகுதான் அந்த நேர்காணல் நடந்தது. நேர்காணல் ஜூலை மாதம் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், டிசம்பர் 13ஆம் தேதி, நேர்காணல் குறித்துத் திரு சிங் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மீடியாகார்ப் நிறுவனமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
மேலும், தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் உத்தரவின்படி அந்த நேர்காணலும் ஒளிபரப்புத் தளங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“வழக்கின் அனைத்துச் சூழ்நிலைகளையும் புரிந்து கொண்டும் மன்னிப்பு கேட்டதைக் கருத்தில் கொண்டும், நாங்கள் திரு சிங்கிற்கும், மீடியாகார்ப் நிறுவனத்திற்கும் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளோம்,” என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
“ஒருவர் நீதிமன்ற அவமதிப்பை மேற்கொண்டால் அது சிங்கப்பூர் நீதித்துறையைச் சரியாக வேலை செய்யவிடாது. அதனால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அது தெரிவித்தது.
தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் இணையப்பக்கத்தில் நீதிமன்ற அவமதிப்பு இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உத்தரவுக்குக் கீழ்ப்படியாதது மற்றும் நீதிமன்ற நடவடிக்கையில் குறுக்கிடுவது ஆகியவை அவை.
பொய் சாட்சி கூறிய வழக்கின் தீர்ப்பை எதிர்த்துத் திரு சிங் மேல்முறையீடு செய்திருந்தார். அது டிசம்பர் 4ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.

