தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடரும் மோசடிக் கொடுமை; விழிப்புநிலை அவசியம்

2 mins read
b3a80641-a199-459a-90c4-83bad37b47c5
மோசடிக் குற்றங்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிங்கப்பூரில் ஆங்காங்கே காவல்துறை அறிவிப்புப் பதாகைகளை வைத்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோசடிக்காரர்கள் விரிக்கும் வலையில் விழுந்து சேமிப்பை இழக்கும் அவலம் சிங்கப்பூரில் தொடர்கிறது.

2023ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் ஏறத்தாழ 46,000 மோசடி வழக்குகள் பதிவாகின.

நிலைமை மேம்படுவது போல் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டின் முற்பாதியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 26,587 மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் தங்கள் கடன் அட்டைகளை முறையற்ற வகையில் பயன்படுத்தி இருப்பதாக சிங்கப்பூரர்களைப் பயமுறுத்தி அவர்களிடமிருந்து மோசடிக்காரர்கள் பணம் பறிக்கின்றனர்.

அந்த நாட்டுக்கு அவர்கள் அதற்கு முன் சென்றிருக்கவில்லை என்றபோதிலும் சட்டப்படி தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்று பயந்து, பதற்றத்தில் மோசடிக்காரர்கள் கேட்ட பணத்தைச் சிலர் கொடுத்துவிடுகின்றனர்.

இதற்குச் சிங்கப்பூரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஓர் உதாரணம்.

தனியாக வசித்து வரும் அந்த மூதாட்டியுடன் மோசடிக்காரர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி என அவர் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டார்.

அந்த மூதாட்டியின் கடன் அட்டை சீனாவில் முறையற்ற பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதாக அந்த மோசடிக்காரர் பொய் கூறினார்.

தம்முடன் ஒத்துழைக்காவிட்டால் கைது செய்யப்படுவார் என்று அந்த மூதாட்டியை அவர் மிரட்டினார்.

இதைக் கேட்டு அச்சமடைந்த அந்த மூதாட்டி, இதைப் பற்றி வங்கியிடம் விசாரிக்காமல் அந்த மோசடிக்காரர் சொன்னபடி மொத்தம் $200,000 அனுப்பிவைத்தார்.

மோசடிக் குற்றங்களைத் தடுக்க காவல்துறையும் வங்கிகளும் தங்களால் ஆன அனைத்தையும் செய்து வருகின்றன.

ஆனால், இதில் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம்.

அடையாளம் தெரியாதோரிடமிருந்து தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் வரும்போது அவற்றைப் பொதுமக்கள் நம்பிவிடக்கூடாது.

அவற்றைப் புறக்கணிப்பது நல்லது.

இதுபோன்ற சந்தேகத்துக்குரிய அழைப்புகள், குறுஞ்செய்திகளைத் தடுக்கும் ‘ஸ்கேம்ஷீல்டு’ செயலியைக் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்வது நன்மை பயக்கும்.

மேலும், வங்கிகள் தொடர்பான செயலிகள் மூலம் Money Lock அம்சத்துக்கு விண்ணப்பம் செய்யலாம்.

அவ்வாறு செய்வதன் மூலம் அத்தொகையை வங்கி செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது.

குறிப்புச் சொற்கள்