வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை மூன்றாம் காலாண்டில் மிதமான வளர்ச்சி கண்டுள்ளது.
தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக அத்தகைய மிதமான வளர்ச்சி பதிவாகியுள்ளது.
மூன்றாம் காலாண்டில் மறுவிற்பனை வீட்டு விலை 0.4 விழுக்காடு அதிகரித்தது. இரண்டாம் காலாண்டில் அது 0.9 விழுக்காடாக இருந்தது.
தனியார் வீட்டுச் சந்தையைப் பொறுத்தவரை மூன்றாம் காலாண்டில் வீட்டு விலை 1.2 விழுக்காடு அதிகரித்தது. இரண்டாம் காலாண்டில் அது ஒரு விழுக்காடாகப் பதிவானது.
காலாண்டு அடிப்படையில், 2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்குப் பிறகு இம்முறை ஆகக் குறைவான விலை உயர்வு பதிவாகியிருப்பதாகக் கழகம் புதன்கிழமை (அக்டோபர் 1) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
முன்னதாக, கொவிட்-19 கிருமிப் பரவலால் ‘பிடிஓ’ வீடுகளின் கட்டுமானம் மெதுவடைந்து, கழக வீடுகளை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளும் விகிதம் பாதிக்கப்பட்டது.
அதையடுத்து, 2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து, காலாண்டு அடிப்படையில் மறுவிற்பனை வீட்டு விலை தொடர்ந்து அதிகரித்துவந்தது.
ஆனால், இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் குறைவான எண்ணிக்கையிலேயே மறுவிற்பனை வீடுகள் கைமாறின. சென்ற ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்புநோக்க அது 10.9 விழுக்காடு குறைவு.
தொடர்புடைய செய்திகள்
இவ்வேளையில், தனியார் வீட்டு விற்பனை மூன்றாம் காலாண்டில் 29 விழுக்காடு அதிகரித்தது.
கூடுதலான புதிய வீட்டுத் திட்டங்கள் விற்பனைக்கு விடப்பட்டது இதற்குக் காரணம் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் கூறியது.
சொத்துகளின் காலாண்டு சராசரி விலை உயர்வு, கடந்த மூன்று காலாண்டுகளாக ஏறத்தாழ ஒரு விழுக்காடாகப் பதிவானதாக ஆணையம் கூறியது.
சென்ற ஆண்டும் இதேபோன்ற விலை உயர்வு பதிவானதாக அது குறிப்பிட்டது.
இந்த ஆண்டின் பிற்பாதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மிதமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கழகமும் ஆணையமும் தெரிவித்துள்ளன.
பொருளியல் வளர்ச்சி மெதுவடையும் நிலையில், ஏற்கெனவே ஊழியர் தேவை மிதமடையும் அறிகுறிகள் தென்படுவதாக அவை குறிப்பிட்டன.
பொருளியல் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் சூழலில் குடும்பங்கள் வீடு வாங்குவது, வீட்டுக் கடன் ஆகியவை தொடர்பில் கவனமாகத் திட்டமிட வேண்டும் என்று அவை ஆலோசனை கூறியுள்ளன.