பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு பெரும் உதவியாக இருப்பது வழிகாட்டி நாய்கள். அவற்றின் உதவியால் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பொது இடங்களுக்கு எளிதாக சென்று வருகின்றனர்.
இருப்பினும் உணவகங்கள் உள்ளிட்ட சில இடங்களில் வழிகாட்டி நாய்களுடன் செல்வதால் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று கவலை தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் செபஸ்டியன் குவாக்குவும் ஒருவர்.
49 வயதான குவாக் தமது வழிகாட்டி நாயுடன் ஓர் உணவகத்திற்கு சென்ற போது அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர், நாய்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தார். வழிகாட்டி நாய் அனுமதிக்கப்பட்டால் தாம் அந்த உணவகத்தைவிட்டு வெளியேறுவதாக வாடிக்கையாளர் கூறியதை குவாக் குறிப்பிட்டார்.
இதுபோன்று பலமுறை தாம் ஒதுக்கப்பட்டதாக குவாக் வேதனையுடன் கூறினார். டாக்சி எடுக்கும்போது இது பிரச்சினையாக உள்ளது என்று அவர் கவலை தெரிவித்தார்.
இதுபோன்ற சிக்கல்களைத் தீர்த்து வைத்து பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பார்வை குறைபாடு உள்ளவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும், அவர்களுக்கு தகுந்த ஆதரவு வழங்க வேண்டும் என்று அக்டோபர் 15ஆம் தேதி அனைத்துலக ‘ஒயிட் கேன் டே’ (White Cane Day) கொண்டாடப்படுகிறது.
அந்நாளில் பார்வை குறைபாடு உள்ளவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் 40,000க்கும் அதிகமானவர்கள் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிமக்களில் அதிகமானவர்கள் மூப்படைதல், நீண்ட ஆயுள் உள்ளிட்ட காரணங்களால் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அதனால், சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் தகுந்த கட்டமைப்புகளை உருவாக்கி அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

