சாங்கி தடையற்ற வர்த்தக மையத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் கள்ளச் சிகரெட்டுகள் அடங்கிய 81,750 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் சுங்கத்துறை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) அறிவித்தது.
கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, மெக்சிகோவுக்கு மறுஏற்றுமதி செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த சரக்குகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அந்தப் பல்வேறு ‘பிராண்டு’ சிகரெட்டுகள் போலி எனச் சந்தேகிக்கப்பட்டதை அடுத்து, அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தக முத்திரை உரிமையாளர்களிடம் சரிபார்க்கப்பட்டு, அவை போலி என்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அக்கள்ளச் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் அச்சிகரெட்டுகள் அழிக்கப்படும்.
சிங்கப்பூரின் தடையற்ற வர்த்தக மையத்தைச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் நியாயமான வர்த்தகத்தைப் பாதிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை ஒழிக்கச் சுங்கத்துறை தொடர்ந்து பாடுபடும் என்றும் அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


