டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனின் நான்கு பெருவிரைவு ரயில் பாதைகளையும் 2027ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இயக்குவதற்கும் பராமரிப்பதற்குமான ஒப்பந்தத்தை கம்ஃபர்ட்டெல்குரோ கூட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இரு போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி பிரெஞ்சுப் போக்குவரத்து நிறுவனமான ஆர்ஏடிபி டெவலப்மெண்ட் (RATP Dev) , கம்ஃபர்ட்டெல்குரோ ஆகியவை இணைந்த கூட்டு நிறுவனம் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளது.
டென்மார்க் தலைநகரின் பெருவிரைவு ரயில் அமைப்பின் மேம்பாடு, கட்டுமானம், இயக்கம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் ‘மெட்ரோசெல்ஸ்காபட்’ (Metroselskabet) நிறுவனம் ஆகஸ்ட் 28ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், விலை, தரம் குறித்த ஒட்டுமொத்த மதிப்பீட்டின் அடிப்படையில், ‘கேபிஎச் மெட்ரோ பார்ட்னர்’ கூட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிட்டது.
17 பில்லியன் டேனிஷ் குரோனோ (கிட்டத்தட்ட 3.36 பில்லியன் வெள்ளி) மதிப்புடைய இந்த ஒப்பந்தம் 12 ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அந்த ஒப்பந்தத்தைப் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வாய்ப்பும் உண்டு எனக் கூறப்பட்டது.
உலகிலேயே வாரத்தில் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் இயங்கும் மூன்று அதிவேகப் போக்குவரத்து அமைப்புகளில் கோப்பன்ஹேகன் ரயிலும் ஒன்று.
44 நிலையங்களை உள்ளடக்கிய இந்த முழுமையான தானியக்க ரயில் கட்டமைப்பு கிட்டத்தட்ட 43 கிலோமீட்டர் தூரத்திற்குப் பரவியுள்ளது.
2025ஆம் ஆண்டில், இந்த விரைவு ரயில் கட்டமைப்பு 135 மில்லியன் பயணிகளைக் கையாண்டது குறிப்பிடத்தக்கது.
புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவு ரயிலை வேகமான, நம்பகமான போக்குவரத்துச் சேவையாக இருப்பதை உறுதிசெய்வது மிகவும் முக்கியம் என மெட்ரோசெல்ஸ்காபட் நிறுவனத்தின் செயல்பாட்டு, பராமரிப்பு இயக்குநர் சோரன் பாய்சன் தெரிவித்தார்.
மேலும், பயணிகளுக்கு எந்தவித இடையூறும் இன்றி, புதிய சேவைக்கு மாறும் செயல்முறை மிகவும் சுமுகமாக மேற்கொள்ளப்படும் எனத் திரு பாய்சன் கூறினார்.
கம்ஃபர்ட்டெல்குரோ, ஆர்ஏடிபி டெவலப்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து பெருவிரைவு ரயில் பாதையை இயக்குவது இது மூன்றாவது முறையாகும்.
முதல்முறையாக, 2023ஆம் ஆண்டில் பாரிசின் ‘லைன் 15’ தெற்குப் பகுதியை இயக்குவதற்கான ஒப்பந்தத்தை கம்பஃர்ட்டெல்புரோ டிரான்சிட் நிறுவனம் வென்றது.
அதைத் தொடர்ந்து, 2024ஆம் நவம்பரில் கம்ஃபர்ட்டெல்குரோவின் துணை நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட், ஆர்ஏடிபி டெவலப்மெண்ட் ஆசியா பசிபிக் ஆகியவற்றின் கூட்டு நிறுவனத்திற்கு ஜூரோங் வட்டார இலகு ரயில் பாதையை இயக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
சிங்கப்பூரின் ரயில் சேவைத் துறையில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஈடுபட்டது அதுவே முதன்முறையாகும்.


