அரசாங்க அமைப்புகளில் உள்ள குறைபாடுகள் உள்ளடங்கிய 2024-25 நிதியாண்டுக்கான அறிக்கையைச் சிங்கப்பூரின் தலைமைக் கணக்காய்வாளர் (AGC) அலுவலகம் செப்டம்பர் 9 அன்று வெளியிட்டது.
பொதுப் பயனீட்டுக் கழகம் செய்த $7.95 மில்லியன் ஒப்பந்தம் ஒன்றில் இருந்த குறைபாடுகளும் அந்த அறிக்கையில் இடம்பெற்றன. அதன்படி அந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் ஏற்படக் காரணமான அதிகாரி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன் ஆற்றிய சேவைக்கான மதிப்பீட்டுத் தரவரிசை கீழிறக்கப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இவ்வாறு கூறினார். தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகத்தின் அறிக்கை வெளிவந்த பிறகு பொதுப் பயனீட்டுக் கழகம் உள் விசாரணையை நடத்தியது.
பூச்சிக்கொல்லி மருந்து விநியோகத்துக்கான $7.95 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்துக்கும், நீர்முகப்புப் பணிகளுக்கான $6.75 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்துக்குமான ஆவணங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன.
ஒரு தனிப்பட்ட அதிகாரி செய்த தவறினால் இந்தக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன எனவும் அமைச்சர் விளக்கினார்.