சிராங்கூன்-யூனோஸ் பேருந்துத் தொகுப்பின் கீழ் பொதுப் பேருந்து வழித்தடங்களை இயக்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிக்க பொதுப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்துச் சேவைகளை இயக்குவதற்காக நிலப் போக்குவரத்து ஆணையம் டிசம்பர் 19 அன்று ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுத்தது. தற்போது, இந்தத் தொகுப்பின் கீழ் 27 வழித்தடங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் ஹவ்காங் பேருந்து பணிமனையிலிருந்து இயக்கப்படுகின்றன.
பீஷான் மற்றும் சாங்கி விமான நிலையத்திற்கு இடையே இயங்கும் பேருந்து சேவைகள் 53, ஜூரோங் ஈஸ்ட் மற்றும் சிராங்கூன் இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் பேருந்து 506 ஆகியவை அவற்றில் அடங்கும்.
வரவிருக்கும் கிம் சுவான் பேருந்துப் பணிமனை 2026ஆம் ஆண்டில் நிறைவடையவுள்ள நிலையில், இந்தச் சேவைகளில் சில அவற்றின் செயல்பாடுகளை ஹவ்காங் குளோசில் அமைந்துள்ள புதிய பணிமனைக்கு மாற்றக்கூடும். இது டெஃபு அவென்யூ 1ல் உள்ள ஹவ்காங் பேருந்து பணிமனையின் தற்போதைய இடத்திற்கு அருகில் உள்ளது.
தற்போதைய நடத்துநரான எஸ்பிஎஸ் டிரான்சிட், 2016 முதல் சிராங்கூன்-யூனோஸ் பேருந்து தொகுப்பை இயக்கி வருகிறது.
2022ஆம் ஆண்டில் டௌன்டவுன் பாதை புதிய ரயில் நிதிக் கட்டமைப்பிற்கு மாறியதைத் தொடர்ந்து, சிராங்கூன்-யூனோஸ் பேருந்து தொகுப்பிற்கான எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் ஒப்பந்தம் வெளிப்படுத்தப்படாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது.
இந்தத் தொகுப்பிற்கான ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிப்பில் தாங்கள் பங்கேற்பதாக டவர் டிரான்சிட், எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி ஆகிய பேருந்து நிறுவனங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் டிசம்பர் 22 அன்று தெரிவித்தன.
அரசாங்க கொள்முதல் இணையவாசலான ஜிபிஸ்சின்படி (GeBiz), இந்த ஒப்பந்தப்புள்ளி ஏப்ரல் 17, 2026 அன்று மாலை 4 மணிக்கு முடிவடையும்.
தொடர்புடைய செய்திகள்
தெம்பனிசில் உள்ள 27 பொதுப் பேருந்து வழித்தடங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிக்குரிய அழைப்பு டிசம்பர் 2024ல் வெளியானது. இருப்பினும் அது ஏப்ரல் 2025க்கு முன்னதாகவே மூடப்பட்டது. 2026 முதல் இந்தச் சேவைகளை இயக்குவதற்கான ஒப்பந்தம் பின்னர் ஆறு மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 2025ல் கோ-அஹெட் சிங்கப்பூருக்கு வழங்கப்பட்டது.
ஒப்பந்தங்கள் தொடக்கத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு இயங்கும். இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிப்புக்கான தெரிவும் அதில் உள்ளது.
சிராங்கூன்-யூனோஸ் பேருந்துத் தொகுப்பின் விநியோகத் தேதி ஜூன் 12, 2032 என ஜிபிஸ்சில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் தொடர்பிலான ஒப்பந்தம் 2027ல் தொடங்கும் என்று கருதப்படுகிறது.

