டௌன்டவுன் ரயில் பாதை விரிவாக்கத்திற்கான எம்ஆர்டி நிலையங்களைக் கட்ட $735 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தங்கள்

டௌன்டவுன் ரயில் பாதை விரிவாக்கத்திற்கான எம்ஆர்டி நிலையங்களைக் கட்ட $735 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தங்கள்

2 mins read
021f745e-0665-4702-a10a-6eef7a859c95
டௌன்டவுன் ரயில் பாதையை வடக்கு-தெற்கு ரயில் பாதையுடன் இணைக்கும் எம்ஆர்டி நிலையத்தைக் காட்டும் ஓவியம். - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

டௌன்டவுன் ரயில் பாதையின் இரண்டாவது விரிவாக்கத்துடன் தொடர்புடைய மூன்று நிலையங்களின் கட்டுமானப் பணிகள் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்கும்.

இதற்காக ஏறத்தாழ $735 மில்லியன் மதிப்பிலான இரண்டு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் பிப்ரவரி 19ஆம் தேதியன்று அறிவித்தது.

ஓர் ஒப்பந்தம் வோ ஹப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கும் மற்றொரு ஒப்பந்தம் சாம்வோ கார்ப்பரேஷன் மற்றும் சைனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை ஆகியவற்றின் கூட்டு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

வோ ஹப் இன்ஜினியரிங் ஒப்பந்தத்தின் மதிப்பு $285 மில்லியன்.

இந்த ஒப்பந்தத்தின்கீழ், சுங்கை காடுட் அவென்யூவில் நிலத்தடி எம்ஆர்டி நிலையத்தை வடிவமைத்துக் கட்டுவதுடன், சுவா சூ காங் நார்த் 7ஐ விரிவாக்கம் செய்ய ஒரு வாகன மேம்பாலத்தையும் பாங் சுவா கால்வாயின் குறுக்கே பாதசாரிகளுக்கான மேம்பாலத்தையும் இந்நிறுவனம் அமைக்கும்.

இந்தப் பாதசாரி மேம்பாலம் இயூ டீ பகுதி, புதிய நிலையம், ரயில் பாதை ஆகியவற்றுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்தும் என்று ஆணையம் கூறியது.

கூட்டு நிறுவன ஒப்பந்தத்தின் மதிப்பு $450 மில்லியன்.

இந்த இரண்டாவது ஒப்பந்தத்தின் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட இரண்டு எம்ஆர்டி நிலையங்கள் கட்டப்படும். ஒன்று டௌன்டவுன் ரயில் பாதையில் உள்ள நிலத்தடி நிலையம், மற்றொன்று வடக்கு-கிழக்கு வரிசையில் இயூ டீ, கிராஞ்சி நிலையங்களுக்கு இடையே அமையவுள்ள நிலத்துக்குமேல் கட்டப்படும் நிலையம் ஆகும்.

இந்த விரிவாக்கத்திற்கான பயணிகள் சேவை 2035ஆம் ஆண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தப் பகுதியில் நிலப்பரப்பு சிக்கலானதாக இருக்கும் என்பதால், மண் சரிவைத் தடுக்கும் மற்றும் நிலைப்படுத்தும் கட்டமைப்புகள் பயன்படுத்தப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இத்தகைய கட்டமைப்புகள் கட்டுமானத் தளத்தைச் சுற்றியுள்ள நிலம் நகராமல் தடுக்கும்.

வடக்கு-தெற்கு ரயில் பாதைப் பயணிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், இந்த வேலைகள் பெரும்பாலும் ரயில் இயங்காத நேரங்களில் நடைபெறும். மேலும், கட்டுமானத் தூசு மற்றும் இரைச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குடியிருப்பாளர்களுக்கு அடிக்கடி தகவல்கள் வழங்கப்படும் என்றும் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

இந்த விரிவாக்கம் செயல்பாட்டுக்கு வரும்போது, சிங்கப்பூரின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளுக்கு அல்லது அங்கிருந்து வேறு இடங்களுக்குப் பயணம் செய்யும் பயணிகளின் பயண நேரம் கணிசமான அளவு குறையும்.

குறிப்புச் சொற்கள்