சிங்கப்பூரில் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்க கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான ‘கெட்டமின்’ கடந்த நான்கு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.
‘கெட்டமின்’ உள்ளடங்கிய நாசி தெளிப்பானின் விற்பனைக்கு சுகாதார அறிவியல் ஆணையம் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலாக அனுமதி வழங்கியது.
அப்போது தங்களிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு அந்த நாசி தெளிப்பானை ஐந்து மனநல மருத்துவர்கள் பயன்படுத்தினர்.
அந்த மருந்து மிகச் சிறந்த பலனைத் தந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தங்கள் நோயாளிகளில் பெரும்பாலானோர் குணமடைந்ததாக அல்லது நிவாரணம் பெற்றதாக அந்த ஐந்து மருத்துவர்களில் நால்வர் கூறினர்.
தமது 16 நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் மன அழுதத்திலிருந்து நிவாரணம் பெற்றதாக ஐந்தாவது மருத்துவர் தெரிவித்தார்.
தமது நோயாளிகளில் பாதிப் பேருக்கு மன அழுத்தத்துக்கான அறிகுறிகள் 50 விழுக்காடு குறைந்ததாக அவர் கூறினார்.
ஃபேரர் பார்க் மருத்துவமனையில் உள்ள மனநல மருந்தகம் ஒன்றில் 15க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ‘கெட்டமின்’ நாசி தெளிப்பான் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மருந்து நோயாளிகளுக்கு மிக விரைவில் நிவாரணம் அளிப்பதாக மூத்த மனநல மருத்துவர் விக்டர் குவோக் கூறினார்.
இந்த சிகிச்சை முறைக்கு உட்படும் சிலருக்கு முதலில் தலைச் சுற்றல், குமட்டல், ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.
ஆனால், போகப் போக அது பழகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
‘கெட்டமின்’ உள்ளடங்கிய இந்த மருந்தை மருந்தகங்களில் மட்டுமே உடலில் செலுத்த முடியும்.
அதிலும் குறிப்பிட்ட அளவில், இடைவெளியில் மருந்தைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த மருந்து தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மருந்தை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும்போது சராசரியாக $1,000 செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

