பொது இடங்களில் ஒப்பனை செய்துகொள்வதைத் தவிர்க்குமாறு பயணிகளிடம் கோரிக்கை விடுக்கும் பெருவிரைவு ரயில் அறிவிப்புப் பலகையொன்று பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. நினைவூட்டல் அறிவிப்புப் பலகை ஏன் வைக்கப்பட்டுள்ளது என்று இணையவாசிகள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். பலரும் இணையத்தில் அதுபற்றிக் கருத்துரைத்து வருகின்றனர்.
இம்மாதம் (ஏப்ரல்) 10ஆம் தேதி ரெடிட் பதிவில் பெருவிரைவு ரயில் அறிவிப்புப் பலகை ஒன்றின் நிழற்படம் பகிர்ந்துகொள்ளப்பட்டது. அது, “பொது இடத்தில் ஒப்பனை செய்ய வேண்டாம்,” என்று கூறுகிறது. அறிவிப்புப் பலகையில் இரண்டு உருவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று கண்ணிமையைச் சீர் செய்கிறது. மற்றொன்று கால்நகங்களை வெட்டுகிறது. அது 1,200க்கும் மேற்பட்ட விருப்பக்குறியீடுகளையும் 150க்கும் அதிகமான கருத்துகளையும் பெற்றுள்ளது.
ஒரு தொடரின் அங்கமான அந்த அறிவிப்புப் பலகை மாறுபட்ட கருத்துகளை ஈர்த்துள்ளது. ஏன் அது வைக்கப்பட்டது என்று சிலர் குழப்பத்துடன் கேட்டனர். வேறு சிலர் அது தேவைதான் என்று கூறினர்.
பயணிகள் ரயில்களில் செல்லும்போது கனிவுடன் நடந்துகொள்வதை ஊக்குவிக்க எஸ்ஆம்ஆர்டி நிறுவனம் இயக்கமொன்றைக் கடந்த ஆண்டு (2025) நவம்பர் மாதம் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாகத் தொடர் அமைந்துள்ளது. பயணிகளை ரயில் பெட்டியின் நடுப்பகுதிக்குள் செல்லுமாறு கோருவதும் ரயில் பெட்டிகளின் தரைப் பகுதியில் அமரக்கூடாது என்று கேட்டுக்கொள்வதும் அந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள மற்ற அம்சங்கள்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம், பொதுப் போக்குவரத்தில் ஒப்பனை செய்துகொள்வது பற்றி 25 பேரின் கருத்துகளைக் கேட்டறிந்தது.
அது ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்று பெரும்பாலோர் கூறினர். ஆனால் அதே நேரம், மற்றப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் ஒப்பனை செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மேல் விவரம் கேட்டு எஸ்எம்ஆர்டி நிறுவனத்தைத் தொடர்புகொண்டுள்ளது.

