வாகன நிறுத்துமிடங்களைச் சமூகப் பயன்பாட்டுக்கு மாற்றுவது கவனமாக மதிப்பிடப்பட வேண்டும்: சுன் ஷுவெலிங்

வாகன நிறுத்துமிடங்களைச் சமூகப் பயன்பாட்டுக்கு மாற்றுவது கவனமாக மதிப்பிடப்பட வேண்டும்: சுன் ஷுவெலிங்

2 mins read
a1fddb9c-4fd7-47f8-83a2-89cd2ca308f7
பயன்படுத்தப்படாமல் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்களைச் சமூகப் பயன்பாட்டு இடங்களாக மாற்றுவது குறித்த கேள்விகளுக்கு ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங் விடையளித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிகம் பயன்படுத்தப்படாமல் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்களைச் சமூகப் பயன்பாட்டு இடங்களாக மாற்றுவது குறித்த கேள்விகளுக்கு, அவ்வகை முன்மொழிவுகளைக் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்று தேசிய வளர்ச்சி மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங் பதிலளித்தார்.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஹோ, தங்கள் தொகுதியில் உள்ள கிளமெண்டி பீக்ஸ் உள்ளிட்ட குடியிருப்புத் திட்டங்களில், பயன்பாட்டில் இல்லாத வாகன நிறுத்துமிடங்களைச் சமூகப் பயன்பாட்டிற்கு மாற்றுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து கேள்வியெழுப்பினார்.

இதற்கு முன்னதாக, செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இணைப் பேராசிரியர் ஜேமஸ் லிம் இதுகுறித்துக் கேள்வியெழுப்பியிருந்தார்.

அக்கேள்விகளுக்குப் பதிலளித்த திருவாட்டி சுன் ‌ஷுவெலிங், குடியிருப்பாளர்களின் தேவைகள், பாதுகாப்பு ஆகியவற்றுடன் வாகன நிறுத்துமிடங்களுக்கான தேவையைப் பூர்த்திசெய்ய போதுமான இடங்கள் இருப்பது, அவர்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்கள், தீப்பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து, ‘கிளமெண்டி பீக்ஸ்’ கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள்கூட முடிவடையாததால், அவ்வட்டாரத்தின் வாகன நிறுத்தத் தேவைகள் இன்னும் முழுமையான நிலையை எட்டவில்லை என்றும் அதனை மாற்றியமைப்பது குறித்துப் பரிசீலிக்க இது சரியான நேரமாக இராது என்றும் மூத்த துணையமைச்சர் கருத்துரைத்தார்.

குடியிருப்புத் திட்டத்தின் தொடக்க காலத்திலேயே வாகன நிறுத்துமிடங்களை மாற்றுப் பயன்பாட்டிற்கு மாற்றுவதை வீவக பரிந்துரைக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

இம்மாற்றங்கள் ஏற்பட்டு வாகன நிறுத்துமிடங்கள் நிரந்தரமாக அகற்றப்பட்டால், அது பிற்காலத்தில் வாகன நிறுத்த இடப்பற்றாக்குறைக்கு வழிவகுக்கலாம் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்