உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில், கரிம வெளியேற்ற ஆற்றல் தேவைகளையும் உயர்த்தாமல் நாடுகள் குளிரூட்டும் வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் எனச் சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மை அமைச்சர் கிரேஸ் ஃபூ வியாழக்கிழமை (செப்டம்பர் 17) அன்று வலியுறுத்தினார்.
ஐக்கிய நாட்டு சபை ஏற்பாடு செய்த முதலாவது உலகளாவிய குளிரூட்டும் உடன்பாட்டு மாநாட்டில் உரையாற்றியபோது அமைச்சர் ஃபூ இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தீவிர வெப்ப அலைகளை எதிர்கொள்வதற்கான உலகளாவிய வெப்ப மீள்திறன் உத்தியை ஐநா அறிவித்தது.
உலகளாவிய சராசரியைவிட ஆசியா இரு மடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஃபூ, சாதனை அளவை எட்டிய எல் நினோ சூழல், சுட்டெரிக்கும் வெயில், நீண்ட வறட்சிக்காலம் என இயற்கைச் சீற்றங்கள் தீவிரமடைந்து வருவதாகக் கூறினார்.
சிங்கப்பூரின் அண்மைய பருவநிலை முன்னுரைப்புகளின்படி, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஆண்டின் சராசரி வெப்பநிலை ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் இதனால் சுட்டெரிக்கும் வெயில் நாள்களும் வெப்பமான இரவுகளும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐநாவின் சுற்றுப்புறத் திட்ட அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், தீவிர வெப்ப அலை என்பது மிகக் கொடூரமான, வேகமாக வளர்ந்து வரும் ஆபத்து எனக் குறிப்பிட்டுள்ளது. உலகளவில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளின் எண்ணிக்கை 2050ஆம் ஆண்டுக்குள் 5.6 பில்லியனை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய நிலையைவிட மூன்று மடங்கு அதிகம்.
ஐநா சுற்றுப்புறத் திட்டம் மற்றும் ‘கூல் கோலிஷன்’ அமைப்புகளுடன் இணைந்து சிங்கப்பூர் இந்த மாநாட்டை நடத்துகிறது. செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) முதல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வரை நடைபெறும் இந்த நிகழ்வில், குளிரூட்டும் உடன்பாட்டின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் அமைப்பின் முதல் கூட்டமும் இடம்பெறுகிறது.
மாநாட்டில் 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 230க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
சிங்கப்பூரின் குளிரூட்டும் முன்னெடுப்புகளுக்கான மூன்று முக்கிய முன்னுரிமைகளாகத் திட்டமிடல், கொள்கை மற்றும் பங்காளித்துவம் ஆகியவற்றை அமைச்சர் ஃபூ பட்டியலிட்டார்.
