கதிர்வீச்சுப் பாதுகாப்பு, அவசரகாலத் தயார்நிலை, கதிர்வீச்சுக் கண்காணிப்பு, ஒழுங்குமுறைக் கொள்கைகளை உருவாக்குதல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பதற்காக, செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 30) சிங்கப்பூர், இந்தோனீசியாவின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தேசிய சுற்றுப்புற வாரியத்துக்கும் இந்தோனீசியாவின் அணுசக்தி ஒழுங்குமுறை அமைப்புக்கும் இடையிலான இந்தப் பங்காளித்துவத்தில், கூட்டுப் பயிற்சி, பணியாளர் பரிமாற்றங்கள், ஆராய்ச்சிப் பங்காளித்துவங்கள், தொழில்நுட்பக் கூட்டங்கள் போன்ற செயல்பாடுகள் அடங்கும்.
“சிங்கப்பூர் தனது எதிர்கால எரிசக்திக் கலவையில் அணுசக்தியின் சாத்தியமான பங்கைப் பற்றி ஆய்வு செய்து வரும் நிலையில், அணுசக்திப் பாதுகாப்பு, ஒழுங்குமுறை மேற்பார்வை, அவசரகாலத் தயார்நிலை ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த, இந்த ஒப்பந்தம் எங்களது நீண்டகால இருதரப்பு ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டுள்ளது,” என்று தேசிய சுற்றுப்புற வாரியத்தின் தலைமை நிர்வாகி பெஞ்சமின் கோ கூறினார்.
“வட்டார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், நம்பிக்கையை வளர்க்கவும், கதிரியக்க அவசரநிலைகளுக்கான கூட்டுத் தயார்நிலையை மேம்படுத்தவும் ஆசியான் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் தேசிய சுற்றுப்புற வாரியம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த ஒப்பந்தம், செவ்வாய்க்கிழமை (ஜூன் 30), ஜகார்த்தாவில் திரு கோ, இந்தோனீசிய ஒழுங்குமுறை ஆணையத்தின் தற்காலிகத் தலைவர் ஜைனல் அரிஃபின் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.
சுகாதாரம் போன்ற துறைகளில் கதிர்வீச்சுப் பாதுகாப்பு மற்றும் அணுசக்திப் பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவை பங்காளித்துவத்தின் பிற பகுதிகளாகும். அணுசக்திப் பாதுகாப்பு என்பது ஓர் ஆலையை அச்சுறுத்தல்கள் மற்றும் தீங்கிழைக்கும் செயல்களிலிருந்து பாதுகாப்பதைக் குறிக்கிறது.
அணுசக்திப் பயன்பாடு குறித்து தகவலறிந்த முடிவை எடுக்கும் சிங்கப்பூரின் திறனைத் தீர்மானிப்பதற்காக, சிங்கப்பூர் 2027ல் ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பால் ஒரு மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படும்.
முன்னதாக தனது அணுசக்தி பயணத்தைத் தொடங்கிய இந்தோனீசியா, 2030களின் முற்பகுதியில் 500 மெகாவாட் அணுசக்தி திறனைத் திட்டமிடுகிறது.
ஜூன் 29ஆம் தேதியன்று, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ மற்றும் இந்தோனீசியாவின் சுற்றுப்புற அமைச்சர் முகமது ஜும்ஹூர் ஹிடாயட் ஆகியோர், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

