சிங்கப்பூர் நிறுவனங்கள் அமெரிக்காவில் வளர்ச்சி காண கைகொடுக்கும் புதிய மையம்

சிங்கப்பூர் நிறுவனங்கள் அமெரிக்காவில் வளர்ச்சி காண கைகொடுக்கும் புதிய மையம்

2 mins read
1ff4faf0-bdb8-4e8f-af07-3376e4dab828
டெக்சஸ் மாநிலத்தில் ‘எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அமைப்பின் வெளிநாட்டு மையத்தைத் திறந்துவைத்து துணைப் பிரதமர் கான் கிம் யோங் உரையாற்றினார். - படம்: எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்

தனித்து ஒதுங்கிவிடும் பொருளியல் கொள்கைகளை நோக்கிய உலகளாவிய போக்கைத் தவிர்த்து, நம்பகமான பங்காளிகளுடனான ஒத்துழைப்பை சிங்கப்பூர் வலுப்படுத்த வேண்டும் என துணைப் பிரதமர் கான் கிம் யோங் வலியுறுத்தி உள்ளார்.

புவிசார் அரசியல் பிளவுகளைச் சமாளிக்க சிங்கப்பூர் அவ்வாறு செய்வது அவசியம் என்றார் அவர்.

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்திலுள்ள ஆஸ்டின் நகரில் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) நடைபெற்ற ‘எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அமைப்பின் புதிய வெளிநாட்டு மையத் திறப்பு நிகழ்வில் பங்கேற்று திரு கான் பேசினார்.

“பொதுப்படையான, உலக நாடுகளுடன் தொடர்புள்ள, வர்த்தகம் சார்ந்த நம்மைப் போன்ற பொருளியலைக் கொண்ட நாடுகள், தாங்கள் மட்டும் நிறைவடைந்தால் போதும் எனக் கருதுவது நடைமுறைக்கு ஒத்துவராது.

“அந்தப் போக்கு நமது சந்தை ஈடுபாட்டைக் குறுகச் செய்து, வளர்ச்சி வாய்ப்புகளை மட்டுப்படுத்திவிடும். இறுதியில், எதிர்பாராத விளைவுகளை சிங்கப்பூர் எதிர்நோக்கும் திறனை அது தடுத்துவிடும்.

“ஓரணியாகச் செயல்படுவதன் மூலம் எந்த ஒரு பொருளியலும் தனித்து உருவாகாத போக்கை நாம் கட்டமைத்துவிட முடியும். அத்துடன், நமது பொருளியல் போட்டித்தன்மையுடன் நீடித்து நிலைத்திருக்கவும் அந்த ஒற்றுமை மூலம் வழி காணலாம்,” என்று குறிப்பிட்டார் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான்.

ஆஸ்டின் நகரில் திறக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மையம், அமெரிக்காவில் ‘எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அமைப்பு திறந்துள்ள நான்காவது மையமாகும். நியூயார்க், சான் ஃபிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலிஸ் ஆகிய நகரங்களில் ஏற்கெனவே அதுபோன்ற மையம் உள்ளது.

சிங்கப்பூர் நிறுவனங்கள் அமெரிக்காவில், குறிப்பாக, டெக்சஸ் மாநிலத்தில் வர்த்தக விரிவாக்கத்தை மேற்கொள்ள அந்த மையங்கள் உதவும்.

அமெரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருவழி வர்த்தகம், முதலீடு, புத்தாக்கத் திறன்களுக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அந்த வெளிநாட்டு மையம் கைகொடுக்கும்.

இருதரப்பு வர்த்தகத்தில் டெக்சஸ் மாநிலம் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட US$9 பில்லியனை ஈட்டியது.

குறிப்புச் சொற்கள்