கட்டடச் சோதனைகளை ஒருங்கிணைப்பதால் செலவும் நேரமும் மிச்சம்: இந்திராணி

கட்டடச் சோதனைகளை ஒருங்கிணைப்பதால் செலவும் நேரமும் மிச்சம்: இந்திராணி

2 mins read
b15ca293-08e4-428c-bbf5-2108064f35b5
கட்டடங்களில் மேற்கொள்ளப்படும் சோதனைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் மூன்று நாள்வரை சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கட்டடங்களில் பல்வேறு அமைப்புகள் மேற்கொள்ளும் சோதனைகளை ஒருங்கிணைப்பதால் செலவும் நேரமும் மிச்சமாவதாக இரண்டாம் தேசிய வளர்ச்சி அமைச்சர் இந்திராணி ராஜா கூறியிருக்கிறார்.

தேசிய வளர்ச்சி அமைச்சின்கீழ் உள்ள பல்வேறு அமைப்புகள், புதிய கட்டடங்களின் சோதனை நடவடிக்கைகளில் சேவைத் தரநிலையை ஒருங்கிணைத்துள்ளன. கட்டடங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை அவை சோதிக்கும்.

ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் மூன்று நாள்வரை சேமிக்க முடியும். அதன்மூலம் ஆண்டுதோறும் ஏறக்குறைய 900 விண்ணப்பங்கள் பலன்பெறும் என்று குமாரி இந்திராணி கூறினார்.

“கட்டட, கட்டுமானத் துறைக்கு ஆதரவளிக்கும் நமது கடப்பாட்டைச் சீரான இந்த அணுகுமுறை பிரதிபலிக்கிறது. தெளிவான நடைமுறைகளும் கணிக்கக்கூடிய கால அட்டவணைகளும் அதற்குக் கைகொடுக்கின்றன,” என்று அவர் சொன்னார்.

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் திங்கட்கிழமை (மார்ச் 10) நடைபெற்ற ‘உலகப் பொறியியல் தினம் 2026: சார்ல்ஸ் ரட் புகழ்பெற்ற உலகளாவிய விரிவுரைகள்’ என்ற நிகழ்ச்சியில் அமைச்சர் இந்திராணி பேசினார்.

“ஒருங்கிணைக்கப்பட்ட சேவைத் தரநிலைகளை வெளியிடுவதன் மூலம் தற்காலிகக் குடியிருப்பு அனுமதி (டிஓபி), சட்டபூர்வ நிறைவுச் சான்றிதழ் (சிஎஸ்சி) ஆகியவற்றுக்கான கால அட்டவணைகள் குறித்துக் கட்டுமானத் துறை இன்னும் சற்று உறுதியுடன் இருக்கலாம்,” என்று அவர் சொன்னார்.

தற்காலிகக் குடியிருப்பு அனுமதி, ஒருவர் புதிய வீட்டில் சட்டபூர்வமாகக் குடியிருக்க வழிவிடுகிறது. அது கூட்டுரிமை வீடாகவோ வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடாகவோ இருக்கலாம். வீட்டிற்கு வெளிப்புறத்தில் சிறிய அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் வசிப்பதற்குப் பாதுகாப்பானது என்பதற்கு உத்தரவாதமாக அது பார்க்கப்படுகிறது.

சட்டபூர்வ நிறைவுச் சான்றிதழ் என்பது கட்டுமானத் திட்டமொன்று அனைத்துப் பாதுகாப்பு, சுகாதார, திட்ட விதிமுறைகளுக்கும் முழுமையாக உட்பட்டுக் கட்டப்பட்டது என்பதற்கு அங்கீகாரம் வழங்குவதாக எடுத்துக்கொள்ளப்படும்.

தற்காலிகக் குடியிருப்பு அனுமதியையும் சட்டபூர்வ நிறைவுச் சான்றிதழையும் வழங்குவதன் தொடர்பிலான முதன்மைப் பொறுப்பு கட்டட, கட்டுமான ஆணையத்தைச் சேர்ந்தது. இருப்பினும் கட்டடம் பாதுகாப்பாக இருப்பதையும் விதிமுறைகளுக்கு ஏற்ப அது கட்டப்பட்டுள்ளது என்பதையும் உறுதிசெய்ய வேறுசில தொழில்நுட்பப் பிரிவுகளின் ஒப்புதலும் அவசியம்.

இதற்கு முன்னர், தற்காலிகக் குடியிருப்பு அனுமதியின் தொடர்பில் பல அமைப்புகள் சோதனைகளுக்காகவும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காகவும் வகுத்த கால அட்டவணைகள் பொதுவாக வெவ்வேறாய் இருக்கும். நகர மறுசீரமைப்பு ஆணையம், நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் பவர், தேசியத் தண்ணீர் அமைப்பான பியுபி முதலியவை அவற்றுள் அடங்கும்.

அதனால் கட்டுமானத் திட்ட நிறைவு குறித்த கால அட்டவணையை உறுதிபட முடிவுசெய்வது சிரமமாக இருந்தது. ஒட்டுமொத்த கட்டுமானத் திட்டத்தின் கால அட்டவணையிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியது.

தரநிலைகள் ஒருங்கிணைக்கப்படுவதை ‘கோர்நெட் எக்ஸ்’ எனும் மின்னிலக்கத் தளம் கையாள்கிறது.

குறிப்புச் சொற்கள்