செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாதிரிகளுக்குப் பயிற்சியளிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பதிப்புரிமை பெற்ற படைப்புகளைப் பயன்படுத்தலாமா? அவ்வாறு செய்யும்போது பதிப்புரிமையை எவ்வாறு பாதுகாக்க முடியும்?
‘ஏஐ’ மாதிரிகளுக்குப் பயிற்சியளிக்கும்போது, பதிப்புரிமைகள் மற்றும் காப்புரிமைகளின் தொடர்பில் கூடுதல் பொறுப்பேற்கச் செய்வதை ஊக்குவிப்பதற்கான வழிகள் குறித்து அரசாங்கம் கருத்துகளைக் கோருகிறது.
இதன் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் பதிப்புரிமைகளும் காப்புரிமைகளும் எவ்வாறு மாற்றமடைய வேண்டும் என்பதன் தொடர்பில் பொதுமக்களுடனான கலந்தாலோசனை புதன்கிழமை (ஆகஸ்ட் 26) தொடங்கப்பட்டது.
உலக அளவில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில் பொதுக் கலந்தாலோசனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. படைப்பாளர்களின் அனுமதியின்றி அல்லது அவர்களுக்குப் பணம் வழங்காமல், பதிப்புரிமை பெற்ற புத்தகங்கள், செய்திக் கட்டுரைகள், படங்கள், இசை முதலியவற்றைப் பயன்படுத்தி ஏஐ மாதிரிகளுக்குப் பயிற்சியளித்ததாகக் குறைகூறல்கள் எழுந்துள்ளன.
சிங்கப்பூரின் சட்ட அமைச்சும் சிங்கப்பூர் மதிநுட்பச் சொத்து அலுவலகமும் இணைந்து இந்தப் பொது கலந்தாலோசனைகளை நடத்துகின்றன. மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் சட்ட அமைச்சர் எட்வின் டோங் அதனை அறிவித்தார். இரண்டு நாள் நீடிக்கும் சிங்கப்பூர் மதிநுட்பச் சொத்து வார விழாவின் ஒரு பகுதியாக அம்மாநாடு நடைபெறுகிறது.
பதிப்புரிமை பெற்ற படைப்புகளை அனுமதியின்றி ஏஐ பயிற்சிக்காகப் பயன்படுத்தும்போது பதிப்புரிமைகள் மீறப்படுகின்றனவா என்பது குறித்து, ஒவ்வொரு வழக்கின் விவரங்களைப் பொறுத்தும் வெளிநாட்டு நீதிமன்றங்கள் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளன.
பதிப்புரிமை பெற்ற படைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணிறவு தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவது, பல நடைமுறைக் கேள்விகள் இன்னும் எஞ்சியிருப்பதை உணர்த்துகிறது என்று திரு டோங் குறிப்பிட்டார். படைப்புகளை ஏஐ பயிற்சிக்குப் பயன்படுத்த விரும்பாத உரிமையாளர்கள் அதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதன் தொடர்பில் பல கேள்விகள் நிலவி வருகின்றன.
தொழில்நுட்பப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதே இதற்கான தீர்வாக இருக்கக்கூடும். ஆனால் அவ்வாறு செய்யப்பட்டால், குறைந்த வளங்களைக் கொண்ட உரிமையாளர்களுக்கு எவ்வாறு ஆதரவு அளிப்பது என்பதையும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.
அரசாங்கம் “உலகளாவிய நிலப்பரப்பைக் கவனமாக ஆராய்ந்து, சரியான சமநிலையைத் தரும் அணுகுமுறையைப் பரிசீலிக்கும்,” என்று திரு டோங் கூறினார்.
பொதுக் கலந்தாலோசனைகள் பற்றிய விவரங்களை go.gov.sg/ai-ip2026 என்ற இணையத்தளத்தில் காணலாம். கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் அக்டோபர் 22ஆம் தேதி மாலை 5 மணி.


