ஆழ்கடல் மேற்பரப்பு வெப்பநிலையிலும் சிங்கப்பூரில் பவளப்பாறைகள் வெளுத்துப்போவது அதிகரித்து வருகிறது. தெற்குத் தீவுகளின் ஆழமற்ற நீரில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டு பாறைகள் பலவீனமாகவும் வெளுத்தும் காணப்படுவதாக கடல் உயிரியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பத்தாண்டுகளில் சிங்கப்பூர் எதிர்கொண்ட மிகப்பெரிய ஜூன் 14 எண்ணெய்க் கசிவு, பாதிப்படைந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துமா என்று அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
மே மாதத்தில், ஆழமற்ற நீர்ப் பரப்பு, இடைநிலை மண்டலங்களில் உள்ள உள்ளூர் பாறைகள் நான்காவது உலகளாவிய வெளுப்பு சம்பவத்தில், லேசாக வெளுத்துப் போய் இருப்பதாக தேசிய பூங்காக் கழகம் கூறியது. ஏறக்குறைய 10 முதல் 20 விழுக்காடு பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவித்தனர். இடைநிலை மண்டலங்கள் என்பது நீரின் அளவு குறையும்போது வெளிப்பட்டு, நீர் அதிகமாகும்போது மூழ்கியிருக்கும் பகுதிகளைக் குறிக்கும்.
கடந்த 1998, 2010, 2016ஆம் ஆண்டுகளில் உலகளவில் பவளப்பாறைகள் வெளுப்படைந்தன. அப்போது சிங்கப்பூரிலும் அதிக அளவில் பவளப்பாறைகள் வெளுத்தன. அந்த ஆண்டுகளும் 2024ஆம் ஆண்டும் எல் நினோ ஆண்டுகள் ஆகும். இது ஒரு பருவநிலை நிகழ்வு. இது கிழக்கு பசிபிக்கில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்ந்து உலக வெப்பநிலை அளவை உயர்த்தவும் காரணமாகிறது.
ஜூன் மாதத்தில் வெளுப்படைதல் 40 விழுக்காடாக இரட்டிப்பானதுடன், அண்மைய எண்ணெய்க் கசிவு செயின்ட் ஜான், லாசரஸ், குசு தீவுகளின் கடற்கரைகளுக்கும் நீருக்கும் பரவியது என்று செயின்ட் ஜான் தீவின் தேசிய கடல் ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறினர். சிங்கப்பூரின் பெரும்பாலான பாதிக்கப்படாத பவளப் பாறைகள் தெற்குக் கடற்பகுதியில் காணப்படுகின்றன.
சிங்கப்பூர் பவளப்பாறைகளில் பெரும்பாலானவை நீருக்கடியில் 6 மீட்டருக்கும் ஆழத்திலேயே உள்ளன. இது இடைநிலை மண்டலங்களையும் ஆழமற்ற நீரையும் உள்ளடக்கியது.
மரின் ஸ்டீவர்ட்ஸ் பராமரிப்புக் குழு ஜூன் மாதத்தில் செமாகாவ் தீவுக்கு அப்பால் முக்குளிப்பு செய்தபோது மேற்பரப்பிலிருந்து 3 மீட்டருக்குள் உள்ள கடினமான பவளங்களில் சுமார் 40 விழுக்காடு உளைச்சல் அறிகுறிகளைக் காட்டுவதாகவும் இருபது விழுக்காடு பவளங்கள் முழுமையாக வெளுத்துவிட்டதாகவும் அதன் நிறுவனர் சூ யீ கூறினார்.
ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க தேசிய பெருங்கடல், வளிமண்டல நிர்வாகம் உலகின் நான்காவது உலகளவிலான வெளுப்படைதல் நிகழ்வு ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியது. ஜூன் மாத நிலவரப்படி, உலகளவில் 70.7 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பவளப் பாறைகள் ஜனவரி 2023 முதல் வெளுப்படையும் அளவுக்கு வெப்பத்தை எதிர்கொண்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
பவளப்பாறைகள் அவற்றின் திசுக்களில் வாழும் பாசிகளிலிருந்து அவற்றின் வண்ணங்களைப் பெறுகின்றன. கடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது பவளப்பாறைகள் பாசிகளை வெளியேற்றி வெளுப்படையும்.
சிங்கப்பூர் நீரில் பல்வேறு வண்ணங்கள், வடிவங்களைக் கொண்ட கிட்டத்தட்ட250 வகையான கடின பவளப்பாறைகள் உள்ளன. இது உலகின் 800க்கும் மேற்பட்ட பவளப் பாறைகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். 100க்கும் மேற்பட்ட பவளப்பாறை மீன்கள், ஏறக்குறைய 200 வகையான கடற்பஞ்சுகள், அரிய, அருகிவரும் கடல் குதிரைகள் , சிப்பிகள் போன்ற பிற உயிரினங்களுக்கு வாழிடங்களாக செயல்படுகின்றன.
சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடல் மேற்பரப்பு வெப்பநிலைகளைப் பொறுத்தவரை மாதாந்திர அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக 30.5 டிகிரி செல்சியஸாக இருக்கும். ஜூன் 16 முதல் செயின்ட் ஜான் தீவில் வெப்பநிலை 31.78 டிகிரி செல்சியஸுக்கும் 30.69 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்டிருந்தது.
ஜூன் 22 முதல் நீர்மட்டம் குறையும் என்பதால், சிங்கப்பூர் கரையோரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக ஆய்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. செயின்ட் ஜான் தீவின் தேசிய கடல் ஆய்வகத்தைச் சேர்ந்த டாக்டர் டான்சில், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை சேர்ந்த பல்வேறு ஆய்வுக் குழுக்களும் செயின்ட் ஜான் தீவின் கடற்கரைகளையும் உயிரினங்களையும் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளன.
எண்ணெய்யின் நச்சுத்தன்மை ஒளிச்சேர்க்கை மூலம் பவளப் பாறைகளுக்கும் அவற்றுக்கு ஆற்றலை வழங்கும் பாசிகளுக்கும் இடையிலான ரசாயன மாற்றத்தை தடுக்கக்கூடும் என்று தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி பயன்முறை அறிவியல் பள்ளியின் விரிவுரையாளர் திரு ஆலிவர் சாங் கூறினார்.
இது பவளப்பாறைகளில் ஆரோக்கியத்தையும் நிறத்தையும் மீண்டும் பெறுவதை மிகவும் சவாலானதாக மாற்றக்கூடும்.
இருப்பினும், வெளுப்படைதல் அளவு 40 விழுக்காட்டைத் தாண்டாது என்ற நம்பிக்கையும் உள்ளது.
வெப்பநிலை குறைந்து வருகிறது என்று டாக்டர் டான்சில் குறிப்பிட்டார்.
ஆண்டின் இரண்டாவது பாதியில், எல் நினா திரும்பி வருவதன் மூலம் அதிக மழை நிலைமைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது கடலை குளிர்விக்க உதவும்.