கடல்வெப்ப உயர்வு காரணமாக 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பவளப் பாறைகளின் பெருக்கம் வெகுவாகக் குறைந்தது. கடந்த ஆண்டு வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருந்தது.
ராஃபிள்ஸ் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள புலாவ் சட்டுமுவில் ஏப்ரல் மாதத்தில் பவளப் பாறைகள் முட்டையிடுவது கண்காணிக்கப்பட்டது. அது, முந்தைய ஆண்டுகளைவிட மிகவும் மந்தமாக இருந்ததாக தேசிய பூங்காக் கழகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) அறிவியல் அறிஞர்கள் கூறினர்.
ஆண்டிற்கு ஒருமுறை அதிக அளவில் முட்டையிடும் நிகழ்வுகள் நிகழ்கின்றன. அது ஒரு கண்கவர் காட்சியாக இருக்கும். நீருக்கடியில் பவளப்பாறைகள் முட்டைகளையும் விந்தணுக்களையும் வெளியிடுவதால் ‘பனி’போல் தோற்றமளிக்கும். இந்த நிகழ்வு பொதுவாக முழு நிலவுக்குப் பிறகு சில இரவுகளில் இடம்பெறுகிறது.
2025ஆம் ஆண்டின் முட்டையிடும் நிகழ்வு ஏப்ரல் 15 மற்றும் 19க்கு இடையில் நடந்தது. 2024ஆம் ஆண்டின் வெப்பத்திலிருந்து மீண்ட பவளப்பாறைகள் இம்முறை இனப்பெருக்கம் செய்ய போதுமான ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்வி ஒன்றக்கு தேசிய பூங்காக் கழகமும் என்யுஎஸ்ஸும் கூட்டாகத் தெரிவித்தன. வெப்பமண்டல கடல் அறிவியல் கழகம், செயின்ட் ஜான்ஸ் தீவு தேசிய கடல் ஆய்வகம் ஆகியவற்றின் ஆய்வாளர்களுடன் இணைந்து கழகம் ஆண்டுதோறும் பவளப்பாறை முட்டையிடும் ஆய்வுகளை நடத்தி வருகிறது.