புதிதாக தொப்புள்கொடி ரத்தத்தைச் சேகரித்து, கையாள்வதற்கு கார்ட்லைஃபுக்கு புதன்கிழமை (நவம்பர் 26) தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சேகரிக்கப்பட்டுள்ள தொப்புள்கொடி ரத்தத்தை மட்டும்தான் கார்ட்லைஃப் வைத்துக்கொள்ளலாம். மற்ற ரத்த வங்கிகளுக்குத் தங்களிடம் இருக்கும் ரத்தத்தை மாற்ற வகைசெய்யும் நடவடிக்கைகள், தங்களுடன் பணியாற்றும் தரப்பினரின் உத்தரவுக்கு இணங்க தாங்கள் வைத்திருக்கும் தொப்புள்கொடி ரத்தத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்கு மட்டுமே கார்ட்லைஃபுக்கு அனுமதி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் கார்ட்லைஃபிடம் நடந்த கணக்கெடுப்பில் பல விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. அதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு இந்தத் தடையை விதித்துள்ளது.
கார்ட்லைஃபின் உரிமத்தை ரத்து செய்யத் தாங்கள் திட்டமிட்டிருப்பதாக சுகாதார அமைச்சு கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி கார்ட்லைஃபிடம் தெரியப்படுத்தியது. பிறகு அந்நிறுவனம், சுகாதார அமைச்சிடம் எழுத்து வடிவில் விவரங்களை வழங்கியது.
ஜூலை கணக்கெடுப்பின்போது தாங்கள் சுட்டிக்காட்டிய விவகாரங்களை கார்ட்லைஃப் சரியாகக் கையாளவில்லை என்ற முடிவுக்கு வந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கார்ட்லைஃபின் உரிமம் புதுப்பிக்கப்பட்டாலும் இத்தடை நடப்பில் இருக்கும். தங்களின் தொப்புள்கொடி ரத்த சேகரிப்புச் சேவைகள், விதிமுறைகளைத் தொடர்ந்து பூர்த்திசெய்வதை அந்நிறுவனம் நிரூபிக்கும் வரை தடை நடப்பில் இருக்கும்.

