சிங்கப்பூரின் ‘கார்ட்லைஃப்’ தொப்புள்கொடி ரத்த வங்கிச் சேவைகள் ஓராண்டு இடைநீக்கத்தை எதிர்நோக்கியுள்ளது.
குழந்தையின் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைக்கும் சேவையை ஓராண்டுக்குக் ‘கார்ட்லைஃப்’ வழங்க இயலாது என்று சுகாதார அமைச்சு, திங்கட்கிழமை (செப்டம்பர் 29) அந்நிறுவனத்துக்கு ஓர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இவ்வாண்டு ஜூலை மாதத்தில் சுகாதார அமைச்சு நடத்திய தணிக்கைச் சோதனையில் நிர்வாகம், சம்பவங்கள் தொடர்பான அறிக்கை, மேலாண்மை உள்ளிட்ட முக்கியச் செயல்பாட்டுப் பகுதிகளில் ‘கார்ட்லைஃப்’ நிறுவனம் ஒழுங்குமுறை தவறியது தெரியவந்தது.
அத்துடன் ‘கார்ட்லைஃப்’ நிறுவனத்தின் மருத்துவ நிர்வாக அதிகாரி சரியான மேற்பார்வை, வழிகாட்டுதலை வழங்கவில்லை என்றும் கண்டறியப்பட்டது.
வங்கியின் சில ரத்தச் சேமிப்புக் கலன்களில் வெப்பநிலை உகந்ததாக இல்லாததால் தொப்புள்கொடி ரத்தம் பெரிதும் பாழானதாக 2023ஆம் ஆண்டு இறுதியில் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் ஆறுமாத காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட இரண்டு தணிக்கைச் சோதனைகளில், ‘கார்ட்லைஃப்’ நிறுவனம் முக்கியமான குறைபாடுகளை நிவர்த்தி செய்துள்ளதாகத் தெரியவந்தது.
ஆதலால் அதன் உரிமம் இவ்வாண்டு ஜனவரி முதல் மேலும் ஓராண்டுக்கு புதுப்பிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 9 மாதங்களில் ‘கார்ட்லைஃப்’ நிறுவனம் கிட்டத்தட்ட 160 தொப்புள்கொடி ரத்த அலகுகளைப் பெற்றுள்ளது.
இந்த இடைநீக்கம் அமலுக்கு வந்தால் நிறுவனம் புதிதாக தொப்புள்கொடி ரத்தச் சேமிப்பு அலகுகளைப் பெற முடியாது. இருப்பினும் ஏற்கனவே சேமிப்பில் உள்ளவற்றை அது தொடர்ந்து பராமரிக்கலாம்.
சுகாதார அமைச்சுக்குத் தனது எழுத்துபூர்வ பிரதிநிதித்துவங்களைச் சமர்ப்பிக்க ‘கார்ட்லைஃப்’ நிறுவனத்துக்கு 14 நாள்கள் அவகாசம் உள்ளது.
தற்போதைய மருத்துவ நிர்வாக அதிகாரியை மாற்றும்படி அந்நிறுவனத்துக்கு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
மேலும், தற்போது உள்ள ரத்த அலகுகள் அனைத்தையும் மீண்டும் மதிப்பாய்வு செய்து வேறு ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றனவா எனக் கண்டறிந்து தீர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.
‘கார்ட்லைஃப்’ நிறுவனம் தனது குறைபாடுகளைச் சரிசெய்வதை அமைச்சு தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கும்.
தொடர்ந்து ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறினால் நிறுவனத்தின் இயக்க உரிமம் ரத்து செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து அமைச்சு முடிவு செய்யும்.