தனியார் தொப்புள்கொடி ரத்தச் சேமிப்பு நிறுவனமான ‘கார்ட்லைஃப்’ வங்கி மீதான தற்காலிகத் தடைமேலும் 3 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம், தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமிக்கும் நடைமுறையை சரிபார்க்க மேலும் அவகாசம் தேவைப்படுவதால் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரை தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கார்ட்லைஃப் வங்கியின் 22 ரத்தச் சேமிப்புக் கலன்களில் ஏழின் வெப்பநிலை உகந்ததாக இல்லாததால் 7,500 குமிழ் தொப்புள்கொடி ரத்தம் பாழானதாகக் கடந்த நவம்பரில் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அந்த நிறுவனம் ஆறுமாத காலம் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் நிறுவனம் புதிய தொப்புள்கொடி ரத்தங்களை வாங்குவது, சோதிப்பது, சேமிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. இந்த இடைநீக்கம் ஜூன் 15ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில் தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது.
‘கார்ட்லைஃப்’ நிறுவனம் தொப்புள்கொடி ரத்தச் சேமிப்புக்குத் தேவையான சில முக்கிய செயல்பாட்டு நடவடிக்கைகளை செய்து முடிக்கவில்லை என்பதை சுகாதார அமைச்சு கண்டறிந்தது.
சுகாதார அமைச்சின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று ‘கார்ட்லைஃப்’ தெரிவித்துள்ளது.
நடைமுறைகளை செய்து முடிக்கவும் தரவுகளை சரியாக சோதிப்பது, ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இந்த மூன்று மாதம் தேவைப்படுவதாக அது குறிப்பிட்டது.
சிறப்பான முறையில் தொப்புள்கொடி ரத்தச் சேமிப்புக்குத் தேவையான அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் ‘கார்ட்லைஃப்’ கூறியது.
தொடர்புடைய செய்திகள்
சுகாதார அமைச்சின் விசாரணை தொடர்வதால் நிறுவனத்தின் 2024ஆம் ஆண்டின் நிதி நிலைமையை பற்றியும் எதிர்பார்ப்புகள் பற்றியும் கணிக்க முடியவில்லை என்று ‘கார்ட்லைஃப்’ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கார்ட்லைஃப்’ வங்கியில் தங்கள் பிள்ளைகளின் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்த 157 பெற்றோரைப் பிரதிநிதிப்பதாக பீட்டர் லோ சேம்பர்ஸ் (பிஎல்சி) எனும் சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெற்றோர் கவலைகளையும் கேள்விகளையும் தான் கேட்டுத் தெரிந்துகொண்டதாக அது கூறியது.
முதற்கட்டமாக, கார்ட்லைஃப் சேவையை நாடிய பெற்றோருக்கு இருக்கும் உரிமைகள், அவர்கள் பெறக்கூடிய இழப்பீடு குறித்து ஆலோசனை வழங்கப்படும் என்று பிஎல்சி கூறியது.