தொப்புள்கொடி ரத்தச் சேமிப்பு சேவை வழங்கும் கார்ட்லைஃப் குழுமம், இந்த ஆண்டின் (2024) முற்பாதியில் நிகர இழப்பு ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
தணிக்கை செய்யப்படாத புள்ளிவிவரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நகலறிக்கையின் முதற்கட்ட மறுஆய்வின் அடிப்படையில் அது இவ்வாறு கூறியது.
ஒப்புநோக்க, சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் குழுமம் நிகர லாபம் ஈட்டியது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி அல்லது அதற்குமுன் குழுமம் இந்த ஆண்டு முற்பாதிக்கான அதன் தணிக்கை செய்யப்படாத முடிவுகளை அறிவிக்கும்போது கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்று ஆகஸ்ட் 12 ஆம் தேதி அது கூறியது.
சுகாதார அமைச்சின் விசாரணை தொடர்வதாகவும் அதன் முடிவுகள் குறித்து உறுதியான தகவல் ஏதுமில்லை என்றும் கார்ட்லைஃப் குறிப்பிட்டது.
முதல் காலாண்டில் அது $11.6 மில்லியன் நிகர இழப்பை அறிவித்தது. ஒப்புநோக்க, சென்ற ஆண்டின் அதே காலகட்டத்தில் குழுமம் $1.2 மில்லியன் நிகர லாபம் ஈட்டியது.
தொப்புள் கொடி ரத்தத்தைச் சரியான முறையில் சேமிக்கத் தவறியதால் வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தர நேர்ந்ததால் குழுமத்தின் வருவாய் பாதித்தது. முதல் காலாண்டில் அது $240,000 இழப்பைச் சந்தித்தது.
சென்ற ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி, தொப்புள்கொடி ரத்தம், மனித உடலின் திசுக்களைச் சேமிக்கும் சேவை தொடர்பில் கார்ட்லைஃப் நிறுவனத்திற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. கடந்த மே 27ஆம் தேதி, அந்தத் தற்காலிகத் தடை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.