மூலாதாரப் பணவீக்கம் 0.4 விழுக்காடாகப் பதிவு

2 mins read
d7c0700f-a2ce-4c37-b513-15fcf11497a6
சில்லறை வர்த்தகம் மற்றும் இதர பொருள்களின் விலை அதிகரித்திருப்பதால் மூலதாரப் பணவீக்கம் உயர்ந்துள்ளது என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 23) தெரிவித்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம், கடந்த செப்டம்பர் மாதம் உயர்ந்து 0.4 விழுக்காடாகப் பதிவானது.

புளூம்பர்க் நடத்திய ஆய்வில் பங்கெடுத்த பொருளியல் நிபுணர்களின் முன்னுரைப்பைவிட இது அதிகம். சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் 0.2 விழுக்காடாகப் பதிவாகும் என்று அவர்கள் முன்னுரைத்திருந்தனர்.

மூலாதாரப் பணவீக்கம் என்பது தனியார் போக்குவரத்து மற்றும் வசிப்பிடம் தொடர்பான செலவினங்களைச் சேர்க்காத பணவீக்கமாகும்.

இது குடும்பச் செலவினத்தை நன்கு பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மூலாதாரப் பணவீக்கம் 0.3 விழுக்காடாக இருந்தது.

இது கடந்த நான்கு ஆண்டுகளில் ஆகக் குறைவான விகிதமாகும்.

சில்லறை வர்த்தகம் மற்றும் இதர பொருள்களின் விலை அதிகரித்திருப்பதால் மூலதாரப் பணவீக்கம் உயர்ந்துள்ளது என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 23) தெரிவித்தன.

இவ்வாண்டின் மூலதாரப் பணவீக்கத்துக்கான தனது முன்னுரைப்பைச் சராசரியாக 0.5 விழுக்காடாக சிங்கப்பூர் நாணய ஆணையம் இம்மாதம் குறைத்தது.

இதற்கு முன்பு மூலதாரப் பணவீக்கம் தோராயமாக 0.5 விழுக்காட்டிலிருந்து 1.5 விழுக்காடு வரை இருக்கும் என்று அது முன்னுரைத்திருந்தது.

செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த பணவீக்கமும் உயர்ந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் அது 0.5 விழுக்காட்டிலிருந்து 0.7 விழுக்காடாக அதிகரித்தது.

தனியார் போக்குவரத்தில் பணவீக்க அதிகரிப்பு, மூலாதாரப் பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக ஒட்டுமொத்த பணவீக்கம் ஏற்றம் கண்டது என சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் கூறின.

கார்களின் விலை ஆகஸ்ட் மாத்தில் 2.4 விழுக்காடு உயர்ந்தது.

அது செப்டம்பர் மாதத்தில் 3.7 விழுக்காடாக அதிகரித்தது.

கார்களின் விலை ஏற்றம் கண்டதால் தனியார் போக்குவரத்து பணவீக்கம் அதிகரித்தது.

மின்சார, எரிவாயு விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சேவைக் கட்டணப் பணவீக்கமும் குறைந்தது.

சுகாதாரக் காப்புறுதித் திட்டத்துக்கான கட்டண அதிகரிப்பு முன்பைவிட குறைவாக ஏற்றம் கண்டதும் தகவல் மற்றும் தொடர்புச் சேவைகளின் விலை முன்பைவிட அதிகளவில் சரிந்ததும் இதற்குக் காரணம்.

வசிப்பிடம் மற்றும் உணவுப் பணவீக்கம் மாறவில்லை.

குறிப்புச் சொற்கள்