2024ஆம் ஆண்டு டிசம்பருக்குப் பிறகு பதிவான அதிகப்பட்ச விழுக்காடு

அக்டோபரைத் தொடர்ந்து நவம்பரிலும் 1.2%ஆகப் பதிவான மூலாதாரப் பணவீக்கம்

2 mins read
812d231a-68c3-4169-abb0-6b919abbaba2
 2025, 2026ஆம் ஆண்டுகளுக்கான பணவீக்க முன்னறிவிப்புகளை அமைச்சும் ஆணையமும் மீண்டும் வலியுறுத்தின. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஒட்டுமொத்தப் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 1.2 விழுக்காடாக இருந்தது.

அதேபோன்று, குடும்பச் செலவினங்களைச் சிறப்பாக வெளிக்காட்டும் வகையில் தனியார் போக்குவரத்து, வசிப்பிடங்கள் தொடர்பிலான சேவைகளைத் தவிர்த்த மூலாதாரப் பணவீக்கம் கடந்த மாதம் 1.2 விழுக்காடாகப் பதிவானது.

அக்டோபர் மாதத்திலிருந்து எவ்வித மாற்றமுமின்றி மூலாதாரப் பணவீக்கமும் ஒட்டுமொத்தப் பணவீக்கமும் தொடர்ந்து சீராக ஒரே நிலையில் இருக்கின்றன.

செப்டம்பர் மாதத்தில் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 0.4 விழுக்காடாக மூலாதாரப் பணவீக்கம் இருந்தது.

சேவைத் துறைக்கானப் பணவீக்கம் அதிகரித்திருந்த போதிலும் சில்லறை விற்பனை, பிற பொருள்களுக்கானப் பணவீக்கம் குறைந்ததாலும் மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் விலை சரிவாலும் மூலாதாரப் பயனீட்டாளர் விலைகள் நவம்பரில் சீராக இருந்தன.

டிசம்பர் 23ஆம் தேதி வெளியான புள்ளிவிவரங்கள் மேற்குறிப்பிட்ட தகவல்களைக் காட்டுகின்றன.

நவம்பருக்கான மூலாதாரம், ஒட்டுமொத்தப் பணவீக்கம் 1.3 விழுக்காடாக இருக்குமென்று புளூம்பெர்க் கருத்துக் கணிப்பில் பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்திருந்தனர்.

அவற்றுடன் ஓப்பிடும்போது பதிவான விழுக்காடு குறைவுதான்.

சேவைத் துறையில் பணவீக்க விகிதம் அக்டோபர் மாதத்தைவிட 0.1 விழுக்காடு உயர்ந்து நவம்பரில் 1.9 விழுக்காடாகப் பதிவானது.

இடைநில்லாப் பேருந்துச் சேவை, சுகாதாரக் காப்புறுதி ஆகியவற்றிற்கான செலவினங்கள் மிகவும் உயர்ந்ததே இதற்குக் காரணம் எனச் சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில்துறை அமைச்சும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.

2025, 2026ஆம் ஆண்டுகளுக்கான பணவீக்க முன்னறிவிப்புகளை அமைச்சும் ஆணையமும் மீண்டும் வலியுறுத்தின.

2025ஆம் ஆண்டுக்கான மூலாதாரப் பணவீக்கம் கிட்டத்தட்ட 0.5 விழுக்காடாக இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு அது 0.5 விழுக்காட்டுக்கும் 1.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த பணவீக்கம் 0.5 விழுக்காட்டுக்கும் ஒரு விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்றும் அடுத்த ஆண்டு அது 0.5 விழுக்காட்டுக்கும் 1.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று முன்னுரைக்கப்படுகிறது.

இனிவரும் மாதங்களில் சிங்கப்பூரின் இறக்குமதி வரிகள் குறையும் என்பது போன்ற காரணங்களால் மூலாதாரப் பணவீக்கம் கணிக்கப்பட்ட வரையறைக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

2026ஆம் ஆண்டு அனைத்துலக கச்சா எண்ணெய் விலைகள் 2025ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது சரியும் எனச் சொல்லப்படுகிறது

குறிப்புச் சொற்கள்